பெயர்களை மாற்றிக்கொள்ளும் நடிகர்கள்
சினிமாவில் நுழையும்போது சிலர் தங்களது வசதிக்காக பெயர் மாற்றிக்கொள்வது வழக்கம். அதற்கு மதம் ஒரு காரணம் அல்ல. ஆனால் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு சில நடிகர்கள் தங்களது பெயர்களை சினிமாவிற்குள் வரும்போது மாற்றிக்கொள்வது வழக்கமாக இருக்கிறது.
உதாரணத்திற்கு அப்துல் காதர் என்ற தனது பெயரை சினிமாவிற்காக மாற்றிக்கொண்டார் ராஜ்கிரண். ஜாம்சட் என்ற தனது பெயரை சினிமாவிற்காக மாற்றிக்கொண்டார் ஆர்யா.
அதே போல் ஸரியா என்ற தனது பெயரை மாற்றிக்கொண்டார் நடிகை நதியா. மேலும் நகாத் கான் என்ற தனது பெயரை சினிமாவிற்காக மாற்றிக்கொண்டார் நடிகை குஷ்பு. இவ்வாறு சிலர் தங்களது இஸ்லாமிய பெயரை மாற்றிக்கொண்டனர்.

பெயரை மாற்றாமல் வாய்ப்பு கிடைப்பதில்லை?
இந்த நிலையில் நேயர் ஒருவர் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம், “இயக்குனர் அமீர் தவிர ஒரு சில இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவர்கள் சினிமாவிற்குள் நுழையும்போது தங்களோட பெயரை மாற்றிக்கொள்கிறார்களே. இதற்கு காரணம் என்ன? ஒரு வேளை தன்னுடைய உண்மையான பெயரை கூறினால் வாய்ப்புகள் சினிமாவில் மறுக்கப்படும் என்பதனால்தானா? அப்படி என்றால் சினிமாவில் சாதி மதம் பார்த்துத்தான் வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறதா?” என்று ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்.

அதற்கு சித்ரா லட்சுமணன், “உண்மையான பெயரை வெளியே கூறினால் வாய்ப்புகள் பாதிக்கப்படாது என்பதற்கு அமீரே உதாரணமாக இருக்கிறார். ஒரு சிலர் தங்களுடைய பெயரை மாற்றிக்கொள்கிறார்கள் என்றால் அது வாய்ப்பிற்காக அல்ல அவரவர்களுடைய சௌகரியத்திற்காக” என்று அக்கேள்விக்கு மிகவும் பொறுப்பாக பதிலளித்திருந்தார்.