விஜய்யின் கடைசி படம்
நடிகர் விஜய் தமிழக அரசியலில் தீவிரமாக களமாட முடிவெடுத்துள்ள நிலையில் தனது 69 ஆவது திரைப்படத்தை கடைசி திரைப்படமாக அறிவித்தார். இத்திரைப்படத்தை ஹெச்.வினோத் தற்போது இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலோடு இத்திரைப்படத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

விஜய்யின் கடைசி திரைப்படம் இது என்பது விஜய்யின் ரசிகர்களுக்கு ஒரு புறம் கவலையான விஷயமாக இருந்தாலும் விஜய் இனி வருங்காலங்களில் அரசியலில் களமாட உள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரீமேக் திரைப்படம்?
கடந்த 2023 ஆம் ஆண்டு நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் “பகவந்த் கேசரி”. இத்திரைப்படத்தை அனில் ரவிபுடி இயக்கியிருந்தார். விஜய்யின் 69 ஆவது திரைப்படம் “பகவந்த் கேசரி” திரைப்படத்தின் ரீமேக் என்று பல செய்திகள் கசிந்து வந்த வண்ணம் உள்ளன.

அனில் ரவிபுடி இயக்கிய “சங்கராந்திக்கி வஸ்துனம்” என்ற திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் ஹீரோவாக வெங்கடேஷ் நடித்துள்ளார். மேலும் இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சௌத்ரி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் விடிவி கணேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய விடிவி கணேஷ், “நான் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய்யை சந்தித்தேன். அப்போது விஜய் என்னிடம் பகவந்த் கேசரி படத்தை 5 முறை பார்த்ததாக கூறினார். தனது கடைசி திரைப்படத்தை அனில் ரவிபுடியையே ரீமேக் செய்ய சொல்லி இயக்கும்படி கேட்டார் விஜய். ஆனால் அனில் ரவிபுடி முடியாது என கூறிவிட்டார்” என கூறினார்.

அப்போது விடிவி கணேஷை இடைமறித்த இயக்குனர் அனில் ரவிபுடி, “இல்லை, நான் அப்படி கூறவில்லை. அங்கு நடந்த உரையாடலே வேறு” என்று கூறி விடிவி கணேஷின் பேச்சை திசை திருப்பிவிட்டார்.
ஏற்கனவே விஜய்யின் கடைசி திரைப்படம் “பகவந்த் கேசரி” திரைப்படத்தின் ரீமேக் என்று தகவல்கள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் விடிவி கணேஷ் கூறிய செய்தி அந்த தகவல்களை உறுதிபடுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.