விவேக் VS வடிவேலு
தமிழ் சினிமா வரலாற்றை எடுத்துப் பார்த்தோமானால் ஹீரோக்களுக்கு மத்தியில் மட்டுமே வணிக போட்டி இருந்து வந்தது. எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய் என இந்த வரிசையை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். ஆனால் காமெடி நடிகர்களுக்கு மத்தியில் வணிக போட்டியை உருவாக்கிய புகழ் விவேக்-வடிவேலு ஆகியோருக்கு மட்டுமே போய் சேரும்.

இருவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவிற்குள் நுழைந்தவர்கள். இருவரும் காமெடி வேடங்களில் போட்டி போட்டு நடித்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தனர். வடிவேலு காமெடிகள் பலவும் அவல நிலை நகைச்சுவையாகவே இருக்கும். அதே நேரத்தில் விவேக் சமூக கருத்துக்கள் நிறைந்த காமெடிகளை கொடுத்தார். இரண்டுமே வேற லெவலில் ஒர்க் அவுட் ஆகியது குறிப்பிடத்தக்கது.
வடிவேலுக்கு மட்டும் இவ்வளவு சம்பளமா?
வடிவேலு-விவேக் ஆகியோர் போட்டி நடிகர்களாக இருந்தாலும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். அதில் மிகவும் பிரபலமான திரைப்படங்கள் என்றால் இயக்குனர் வி.சேகர் இயக்கிய திரைப்படங்கள்தான். “பொங்கலோ பொங்கல்”, “விரலுக்கேத்த வீக்கம்”, “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”, “நம்ம வீட்டு கல்யாணம்” போன்ற வி.சேகர் இயக்கிய திரைப்படங்களில் வடிவேலு-விவேக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் வி.சேகர், விவேக் குறித்த ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். விவேக், இயக்குனர் பாலச்சந்தரின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானாலும் முதலில் விவேக் பெரிதாக கவனிக்கப்படவில்லை. ஆனால் வடிவேலு ஆரம்பக்கட்டத்திலேயே 5 லட்சம் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்துவிட்டாராம்.

ஒருநாள் வி.சேகரின் அலுவலகத்திற்கு வந்த விவேக், “நான் பாலச்சந்தர் மூலமா அறிமுகமானாலும் எனக்கு பெயர் கிடைக்கவே இல்லை. ஆனால் வடிவேலு நான்கைந்து திரைப்படங்களில் நடித்ததிலேயே அதிக சம்பளம் வாங்குகிறான். உங்கள் படங்கள்தான் அவனை தூக்கிவிட்டது. நானும் உங்கள் படத்தில் நடிக்க வேண்டும்” என கூறினாராம். அதற்கு வி.சேகர், “அதெல்லாம் சரி, ஆனால் வடிவேலுவுக்கு கொடுக்கும் அளவுக்கான சம்பளம் உனக்கு கொடுக்க முடியாதே” என கூற அதற்கு விவேக், “நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. நீங்கள் என்ன சம்பளம் கொடுத்தாலும் வாங்குக்கொள்கிறேன்” என கூறினாராம்.
அதன் பின் வி.சேகர் திரைப்படங்களில் வடிவேலுவும் விவேக்கும் இணைந்து நடித்தனர். பின்னர் விவேக் தனி டிராக் பிடித்து ஜனங்களின் கலைஞனாக உருவானார்.