ஹாரிஸ் மாமா…
90’ஸ் கிட்களால் ஹாரிஸ் மாமா என்று செல்லமாக அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இணையவாசிகள் குறிப்பிடுவது போல் “Harris Era” என்று ஒரு காலகட்டம் இருந்தது. அதாவது ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த ஆல்பங்கள் அனைத்தும் ஒரு காலகட்டத்தில் மரண ஹிட் அடித்தன. குறிப்பாக ஏ.ஆர்.ரஹ்மானிற்கு பிறகு இசையில் ஒரு அதி நவீன தரத்தை கொண்டு வந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ்.

ஹாரிஸ் ஜெயராஜ் முதன்முதலில் இசையமைத்த திரைப்படம் “மஜ்னு” என்றாலும் அவர் இசையமைத்து முதலில் வெளியான திரைப்படம் “மின்னலே”. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் விக்ரமன், இதுவரை ஹாரிஸ் ஜெயராஜ் குறித்து யாரும் அறிந்திடாத ஒரு அரிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
உன்னை நினைத்து படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ்…
“ஹாரிஸ் ஜெயராஜை வைத்து உன்னை நினைத்து திரைப்படத்திற்கு இசையமைக்கலாம் என்று நினைத்தேன். பூவே உனக்காக திரைப்படத்தில் சிக்குலட்டு பாடலை கீபோர்டில் மெட்டமைத்தது ஹாரிஸ் ஜெயராஜ்தான். அப்போதே அவரை எனக்கு தெரியும்” என்று பேசிய அவர், மேலும் கூறுகையில்,

“அவர் அப்போது மின்னலே படத்திற்கு இசையமைக்கவில்லை. அப்போதே உன்னை நினைத்து படத்திற்கு அவரை இசையமைக்க வைக்கலாம் என்று அவரது ஸ்டூடியோவிற்கு சென்றிருந்தேன். அங்கே கௌதம் மேனன் அவருடன் இருந்தார். அவரின் படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகிவிட்டதாக ஹாரிஸ் ஜெயராஜ் என்னிடம் கூறினார். அவர் மின்னலே படத்திற்காக இசையமைத்த பாடல்களை எல்லாம் போட்டுக்காட்டினார்.
அப்போதே கௌதம் மேனனிடம் கூறினேன், அப்பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என்று. வசீகரா பாடலை முதன்முதலில் கேட்டபோது மிரண்டுவிட்டேன். எந்த இசையமைப்பாளரின் இசையோடும் ஒப்பிடமுடியாதவாறு இருந்தது” என பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.