கள அரசியலில் விஜய்
விஜய் தனது தமிழக வெற்றி கழகத்தை தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு சமூக நிகழ்வுக்கும் கருத்து தெரிவித்தபடி உள்ளார். அது மட்டுமல்லாது அவ்வப்போது தமிழக அரசையும் ஒன்றிய அரசையும் விமர்சித்தபடியும் பேசி வருகிறார். நேற்று கூட ராயப்பேட்டை YMCA அரங்கில் இஃப்தார் விருந்தில் கலந்துகொண்டார் விஜய். வருகிற 2026 ஆம ஆண்டு தேர்தலை நோக்கி விஜய் நடைபோட உள்ளதால் தீவிர அரசியல்வாதியாகவே அவர் உருமாறி வருகிறார். அந்த வகையில் உலக மகளிர் தினமான இன்று வீடியோ வெளியிட்டு தனது வாழ்த்துகளை கூறியுள்ளார்.

ஒன்றாக இணைந்து திமுகவை மாற்றுவோம்
“அனைவருக்கும் வணக்கம், இன்று மகளிர் தினம். தமிழ்நாடு முழுவதும் உள்ள எனது அம்மா, அக்கா, தங்கை, தோழி என உங்கள் அனைவருக்கும் இந்த தினத்தில் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. உங்கள் அனைவருக்கும் எங்களுடைய மகளிர் தின வாழ்த்துகள். சந்தோஷம்தானே?” என்று அந்த வீடியோவில் பேசிய விஜய், அதனை தொடர்ந்து…
“பாதுகாப்பாக இருந்தால்தானே சந்தோஷத்தை உணரமுடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதபோது எந்த சந்தோஷமும் இருக்காதுதானே என நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. என்ன செய்ய? நீங்கள், நாம் என எல்லோரும் சேர்ந்துதான் இந்த திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால் அவர்கள் நம்மை இப்படி ஏமாற்றுவார்கள் என்று இப்போதுதானே தெரிகிறது. எல்லாமே இங்கு மாறக்கூடியதுதானே. மாற்றத்திற்குரியதுதானே. கவலைப்படாதீர்கள்.
2026 ஆம் ஆண்டு நீங்கள் எல்லாரும் சேர்ந்து, இல்லை, நாம் எல்லோரும் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவர்களை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினமான இன்று உறுதியேற்போம். ஒன்று மட்டும் சொல்கிறேன். எல்லா சூழ்நிலைகளிலும் உங்களுடைய மகனாக அண்ணனாக தம்பியாக தோழனாக உங்களோடு நான் நிற்பேன். நன்றி வணக்கம்” என அந்த வீடியோவில் பேசியுள்ளார் தவெக தலைவர் விஜய்.