இளம் நடிகர்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக ஜொலித்து வருகிறார் மணிகண்டன். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குடும்பஸ்தன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மணிகண்டன், விஜய் சேதுபதி குறித்த ஒரு சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இந்த பணத்தை வச்சிக்கோங்க
“காதலும் கடந்து போகும்” திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார் மணிகண்டன். அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் இருவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டிருக்கிறது. அதனை தொடர்ந்து ஒரு நாள் மணிகண்டனின் தங்கை திருமணத்திற்கு விஜய் சேதுபதி வந்தாராம்.
மணிகண்டன் தனது தங்கை திருமணத்திற்கு விஜய் சேதுபதிக்கு பத்திரிக்கை கூட வைக்கவில்லையாம். ஆனால் மணிகண்டன் என்றோ ஒரு நாள் பேச்சுவாக்கில் தனது தந்தையின் திருமணத்தை குறித்து கூறியதை ஞாபகம் வைத்துக்கொண்டு அந்த திருமண நிகழ்ச்சி முடியும் தருவாயில் விஜய் சேதுபதி வந்தாராம்.

அப்போது மணமக்களை வாழ்த்திவிட்டு மணிகண்டனிடம் 3 லட்ச ரூபாய் கொடுத்தாராம். மணிகண்டன் அந்த பணத்தை வாங்க மறுக்க, விஜய் சேதுபதியோ “உனக்கு இந்த சமயத்தில் நிச்சயம் தேவைப்படும்” என்று வற்புறுத்தி அவரது கையில் பணத்தை கொடுத்துவிட்டு வந்தாராம். அந்த பணத்தை வைத்துத்தான் திருமண மண்டபத்திற்கான வாடகையை கொடுத்தாராம் மணிகண்டன். “அந்த பணம் மட்டும் இல்லை என்றால் நான் கடன் தான் வாங்கியிருப்பேன்” என மிகவும் நெகிழ்ச்சியுடன் அந்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார் மணிகண்டன்.