முழுநேர அரசியல் அவதாரம்
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள விஜய், வருகிற 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளார். தற்போது அவர் நடித்துக்கொண்டிருக்கும் “ஜனநாயகன்” திரைப்படமே அவர் நடிக்கும் கடைசி திரைப்படமாகும்.
இத்திரைப்படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் களமிறங்கவுள்ளார் விஜய். வருகிற ஜூன் மாதம் முதல் தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

விஜய் ஒரு மிகப்பெரிய சக்தி
இந்த நிலையில் இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது நிருபர், விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து லிங்குசாமியிடம் கருத்து கேட்டார். அதற்கு லிங்குசாமி, “அவர் அரசியலுக்குள் வந்து என்ன செய்யப்போகிறார் என்பது எனக்கு தெரியாது. ரஜினிகாந்த் ஒரு வேளை 1996-ல் அரசியலுக்கு வந்திருந்தால், விஜயகாந்த் ஒருவேளை உயிருடன் இருந்திருந்தால், இப்படி சில விஷயங்கள் இருக்கிறதல்லாவா? அதற்கான ஒரு இடம் போல் உள்ளது. அவர் என்ன செய்யப்போகிறார் என்பது இனிமேல்தான் நமக்கு தெரியும்.
சமீபத்தில் கீர்த்தி சுரேஷின் திருமண விழாவிற்கு நான் சென்றிருந்தேன். அங்கு விஜய்யிடம் தனியாக பேச வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரிடம் இது குறித்து பெர்சனலாக பேசியிருக்கிறேன். அவருக்கு மிகப்பெரிய Grace இருக்கிறது. அரசியலை பொறுத்தவரை அந்தந்த நேரம், அந்தந்த காலகட்ட சூழல், அவை எல்லாம் சேர்ந்துதான் தீர்மானிக்கும். கண்டிப்பாக இவர் ஒரு முக்கியமான சக்தியாக இருப்பார். அதுக்கான தகுதி இவரிடம் இருக்கிறது” என கூறினார்.

மேலும் பேசிய அவர், “விஜய் நடித்த ஒரு திரைப்படத்தில் நான் உதவி இயக்குனராக வேலை பார்த்திருக்கிறேன். ஒரு வேலையை எடுத்துக்கொண்டால் அதனை 100 % செய்து முடிப்பார். ஒரு நிமிடம் தாமதமாகவும் வரமாட்டார், ஒரு நிமிடம் முன்னதாகவும் வரமாட்டார். சரியான நேரத்திற்கு வருவார். எந்த விஜய் படமாவது பாதியிலேயே நின்றுபோய்விட்டது, அவர் படப்பிடிப்பிற்கு வரவில்லை, ஒப்புக்கொண்டு படம் நடிக்கவில்லை போன்ற புகார்கள் வந்திருக்கிறதா? அவர் ஒரு வேலையை செய்வார் என்றால் அதனை கச்சிதமாக செய்வார். அதற்கான தகுதி அவரிடம் இருக்கிறது” எனவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.