டான்ஸர் விஜய்…
விஜய் சூறாவளி போல் நடனமாடுபவர் என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்ததே. அந்த வகையில் 35 வினாடிகள் நீளக்கூடிய நடனத்தை ஒத்திகையே இல்லாமல் ஒரே ஒரு முறை மட்டும் நடனம் அமைக்கச் சொல்லி பார்த்துவிட்டு அதனை அப்படியே அவரது தனி ஸ்டைலில் நடனமாடியிருக்கிறார் விஜய். இந்த சம்பவத்தை குறித்துதான் இப்போது பார்க்கப்போகிறோம்.

அசரவைத்த விஜய்…
2014 ஆம் ஆண்டு விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் “கத்தி”. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “பாலம்” என்ற பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த பாடல் படத்தில் இடம்பெறவில்லை என்றாலும் யூட்யூப் தளத்தில் காணக்கிடைக்கிறது.

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நகைச்சுவை நடிகர் சதீஷ், ஒரு விழாவில் பேசியபோது “பாலம்” பாடல் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது “பாலம்” பாடலின் கம்போஸிங்கே முந்தைய நாள் இரவுதான் முடிவடைந்ததாம். அடுத்த நாள் காலையில் அப்பாடலின் படப்பிடிப்பு தொடங்கியது. விஜய்க்கு ஒத்திகை பார்க்க நேரம் இல்லை.
அந்த பாடலில் 35 வினாடிகள் நீளக்கூடிய நடனம் ஒன்று இருந்தது. டான்ஸ் மாஸ்டரை நடனமாடச் சொல்லி ஒரே ஒரு முறைதான் பார்த்தார் விஜய். அதன் பின் டேக் போகலாம் எனச் சொல்லிவிட்டாராம். டான்ஸ் மாஸ்டர் ஆடிய அதே நடனத்தை எந்த பிசிறும் இல்லாமல் அப்படியே ஆடினாராம் விஜய். இந்த சம்பவத்தை ஆச்சரியத்துடன் பகிர்ந்துகொண்டார் சதீஷ்.