இரண்டாம் ஆண்டில் தவெக
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா சென்னை மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்றது. இதில் தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜூனா, தேர்தல் வியூக அமைப்பாளரும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் உட்பட கட்சி நிர்வாகிகள் 2,500 பேர் கலந்துகொண்டனர்.

ஹாஷ்டேக் போட்டு விளையாடுறாங்க…
இந்த நிலையில் இவ்விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், “தமிழ்நாட்டில் எவ்வளவு சீரீயஸாக ஒரு பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இவர்கள் இரண்டு பேரும், அதான் பாசிசமும் பாயாசமும், நம்ம அரசியல் எதிரியும் கொள்கை எதிரியும், இரண்டு பேரும் பேசி வைத்துக்கொண்டு Setting எல்லாம் செய்துகொண்டு மாத்தி மாத்தி சமூக வலைத்தளங்களில் ஹாஷ்டேக் போட்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் அடித்துக்கொள்வது போல் அடித்துக்கொள்வார்களாம். அதை நாங்கள் நம்ப வேண்டுமாம். What bro it’s very wrong bro” என்று திமுகவையும் பாஜகவையும் விமர்சனம் செய்தார். விஜய்யின் இந்த பேச்சைக் கேட்டு அரங்கில் கரகோஷம் எழுந்தது.
விஜய் தனது முதல் மாநாட்டில் அரசியல் எதிரியாக திமுகவையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்பு திமுக தொண்டர்கள் “Get Out Modi” எனவும் பாஜக தொண்டர்கள் “Get Out Stalin” எனவும் ஹாஷ்டேக்கை டிரெண்டு செய்திருந்ததைத்தான் விஜய் இவ்வாறு விமர்சித்துள்ளார்.