சிவகார்த்திகேயனின் பராசக்தி
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படத்திற்கு “பராசக்தி” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 1952 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான “பராசக்தி” திரைப்படத்தின் டைட்டிலையே இதற்கு பயன்படுத்தியுள்ளனர். ஆனால் எதிர்பாராவிதமாக சிவகார்த்திகேயனின் “பராசக்தி” டைட்டிலை அறிவிப்பதாக கூறப்பட்ட நாளுக்கு முந்தைய நாள் விஜய் ஆண்டனியின் 25 ஆவது திரைப்படத்தின் டைட்டில் போஸ்டரும் வெளியானது.
விஜய் ஆண்டனியின் பராசக்தி

விஜய் ஆண்டனியின் 25 ஆவது திரைப்படத்திற்கு தமிழில் “சக்தித் திருமகன்” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் வெளிவருகிறது. தமிழில் இத்திரைப்படத்திற்கு “சக்தித் திருமகன்” என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்தாலும் மற்ற மொழிகளில் இத்திரைப்படத்திற்கு “பராசக்தி” என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. சிவகார்த்திகேயனின் “பராசக்தி” திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளிவருகிறது. இவர்கள் தெலுங்கிலும் “பராசக்தி” என்றே டைட்டில் வைத்திருக்கின்றனர்.
விட்டுக்கொடுத்த தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் “பராசக்தி” திரைப்படத்தை தயாரித்து வரும் ஆகாஷ் பாஸ்கரனுக்கு விஜய் ஆண்டனி தனது “பராசக்தி” என்ற டைட்டிலை விட்டுக்கொடுத்துள்ளார். இனி இந்த டைட்டிலை தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் பயன்படுத்திக்கொள்ளலாம். அதே வேளையில் விஜய் ஆண்டனி தான் நடித்து வரும் 25 ஆவது திரைப்படத்தின் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழி பதிப்புகளுக்கு வேறு டைட்டிலை வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனியே தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.