புரட்சி படம்…
2023 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த “விடுதலை” முதல் பாகம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இத்திரைப்படம் முழுக்க முழுக்க புரட்சிகரமான அரசியலை மையமாக வைத்து உருவான திரைப்படமாகும். காவல்துறையின் அதிகாரப்போக்கை விமர்சித்தும் அந்த அதிகாரப்போக்கின் ஊடாக ஏற்படுத்தப்படும் வன்முறையை கதையம்சமாக கொண்டு உருவான இத்திரைப்படம் தமிழகம் முழுவதும் சற்று அதிர்வலையை கிளப்பியது. இத்திரைப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து “விடுதலை” இரண்டாம் பாகம் உருவானது.

சுமாரான வரவேற்பு…
“விடுதலை” இரண்டாம் பாகம் கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பே கிடைத்தது. படம் முழுக்க பிரச்சார தொனியிலான வசனங்கள் அதிகளவில் இடம்பெற்றிருந்ததாகவும் திரைக்கதையில் சற்று தொய்வு இருந்ததாகவும் பலரும் விமர்சித்தனர். எனினும் தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக “விடுதலை” திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் அமைந்துள்ளது.
இந்த நிலையில் “விடுதலை” திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் இடம்பெற்று நீக்கப்பட்ட ஒரு காட்சியை தற்போது வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இதில் விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் தீவிர அரசியல் விவாதங்களில் ஈடுபடுகின்றனர். அந்த வீடியோ இதோ…