படம் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கல்
“வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படம் இன்று வெளியாவதாக இருந்த நிலையில் இத்திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பெற்ற B4U நிறுவனம் நீதிமன்றத்தை நாடியதால் இத்திரைப்படத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. டிஜிட்டல் உரிமம் இன்னும் விற்கப்படாத நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டதால் இத்திரைப்படத்தை ஓடிடிக்கு விற்க முடியாமல் போனது. இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக B4U நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியது.

இவ்வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இத்திரைப்படத்திற்கு இடைக்காலத் தடை விதித்து ரூ.7 கோடி டெபாசிட் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளித்தளித்தது. அதனை தொடர்ந்து 4 வாரங்களுக்கு இத்திரைப்படம் வெளியாக தடை விதிக்கப்பட்டதாக வெளிவந்த உத்தரவு ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனினும் தயாரிப்பாளரும் B4U நிறுவனத்தாரும் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி இந்த விவகாரத்திற்கு தீர்வு கொண்டுவந்துள்ளதால் இத்திரைப்படம் இன்று மாலை காட்சியில் இருந்து ஒளிபரப்பாகிறது.
உங்களை காக்க வச்சதுக்கு மன்னிச்சிடுங்க…
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் இயக்குனரான எஸ்.யு.அருண் குமார் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அனைவருக்கும் வணக்கம், இன்று மாலை காட்சியில் இருந்து வீர தீர சூரன் திரைப்படம் வெளியாகிறது. எனது தந்தை காலையில் இருந்து மூன்று முறை திரையரங்கத்திற்குச் சென்று படம் வெளியாகாத காரணத்தால் திரும்ப வந்துவிட்டார். இதில் இருந்து சீயான் விக்ரம் ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் எவ்வளவு இன்னல்களை இது உண்டாக்கியிருக்கும் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
உங்கள் அனைவருக்கும் படக்குழுவின் சார்பாக நான் உளமாற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். காலையில் இருந்து திரையரங்குகளில் ஆரவாரத்தோடு காத்திருந்த சீயான் விக்ரம் அவர்களின் ரசிகர்களுக்கும் இந்த பிரச்சனையில் எங்களுடன் உறுதுணையாக நின்ற திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் எனது திரையுலக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி” என அந்த வீடியோவில் பேசியுள்ளார் அருண் குமார்.