“விடுதலை 2”
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று வெளிவந்த “விடுதலை 2” திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான வரவேற்பை பெற்று வருகிறது. வெற்றிமாறனை பொறுத்தவரை அவர் இயக்கும் திரைப்படங்களுக்கு அவர் அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது உண்டு. இதனால் பட்ஜெட் நிச்சயமாக எகிறும். “விடுதலை” இரண்டு பாகங்களை படமாக்க அவர் இரண்டு ஆண்டுகளை எடுத்துக்கொண்டார். இவ்வாறு படப்பிடிப்பு காலம் நீளும்போது பொருட்செலவுகள் அதிகமாகும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. வெற்றிமாறனின் இச்செயல் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாதா? என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுவது இயல்பே.

என்ன காரணம்?
அப்படி இருந்தும் ஏன் வெற்றிமாறனை நீண்ட நாட்கள் படப்பிடிப்பு நடத்த தயாரிப்பாளர்கள் அனுமதிக்கிறார்கள்? என்ற கேள்விக்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பதிலளித்துள்ளார். “ஓரு திரைப்படத்தின் படப்பிடிப்பு காலம் அதிகமாகும்போது நிச்சயம் அத்திரைப்படத்திற்கான செலவு கூடும். இந்த செலவை தாண்டியும் அத்திரைப்படம் வசூல் செய்யுமானால் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும்தானே. அவ்வாறுதான் வெற்றிமாறனின் பல திரைப்படங்கள் பல சாதனைகளை செய்திருக்கிறது. அதனால்தான் அவர் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு காலம் அதிகமாக போனால் கூட தயாரிப்பாளர்கள் அதை பற்றி கவலைப்படுவதில்லை” என கூறியுள்ளார்.