ரசிகர்களின் Favourite கூட்டணி
கௌதம் வாசுதேவ் மேனன்-ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி தமிழ் சினிமா ரசிகர்களின் விருப்பத்திற்குரிய கூட்டணி ஆகும். “மின்னலே”, “காக்க காக்க”, “பச்சைக்கிளி முத்துச்சரம்”, “வாரணம் ஆயிரம்” போன்ற கௌதம் மேனன் இயக்கிய திரைப்படங்களில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் பெருவாரியாக ரசிக்கப்பட்டன. இதனால் இந்த கூட்டணிக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.

திடீர் பிரிவு
எனினும் “வாரணம் ஆயிரம்” திரைப்படத்திற்கு அடுத்ததாக கௌதம் மேனன் இயக்கிய “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அதன் பின் “நீதானே என் பொன்வசந்தம்” திரைப்படம் இளையராஜா இசையில் வெளிவந்தது.
இந்த இரண்டு திரைப்படங்களுக்குப் பிறகுதான் “என்னை அறிந்தால்” திரைப்படத்தில் மீண்டும் ஹாரிஸுடன் இணைந்தார். இந்த இடைவெளியில் ஏன் கௌதம் மேனன் ஹாரிஸ் ஜெயராஜுடன் இணையவில்லை என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. இருவருக்குள்ளும் முரண்பாடு ஏற்பட்டதாக கூட செய்திகள் பரவின.
என்ன காரணம்?
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட கௌதம் வாசுதேவ் மேனன், ஏன் இடையில் ஹாரிஸுடன் இணைந்து பணியாற்றவில்லை? என்பதற்கான காரணத்தை கூறியுள்ளார். “ராஜீவ் மேனனிடம் பணியாற்றியபோதே ஏ.ஆர்.ரஹ்மான் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆதலால் மின்னலே திரைப்படத்திற்கு முதலில் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்குமாறு கேட்டிருந்தேன். ஆனால் அப்போது அவர் பிசியாக இருந்தார்.

அதனால் ஹாரிஸிடம் பணியாற்றினேன். எனினும் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்ற வாய்ப்பு அமைந்தது. ஆதலால் நான் அவருடன் பணியாற்றினேன். இளையராஜா நமது திரைப்படத்திற்கெல்லாம் இசையமைப்பாரா என்ற எண்ணம் எனக்கு முதலில் இருந்தது. எனினும் அந்த எண்ணத்தை உடைத்துக்கொண்டு நானே அவரிடம் சென்று பேசினேன். அப்படி அமைந்ததுதான் நீதானே என் பொன்வசந்தம். அதன் பின் மீண்டும் ஹாரிஸுடன் இணைந்துவிட்டேன்” என கூறியுள்ளார்.