டிரெண்ட் செட்டர்
இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டர் இசையமைப்பாளராக வலம் வருகிறார். தனி இசை ஆல்பங்களின் மூலம் இளைஞர்களின் மனதில் நின்ற ஹிப் ஹாப் ஆதி, “ஆம்பள” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் இசையமைத்து பல ஹிட் பாடல்களை அளித்து வரும் ஹிப் ஹாப் ஆதி, சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

அதிர்ச்சிக்குள்ளான சுந்தர் சி!
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஹிப் ஹாப் ஆதி, “ஆம்பள” திரைப்படத்தில் இசையமைப்பாளராக வாய்ப்பு கிடைத்த சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். ஒரு நாள் சுந்தர் சியின் அலுவகத்தில் இருந்து ஹிப் ஹாப் ஆதியை வரச்சொல்லி தொலைப்பேசியில் அழைப்பு வந்ததாம். அதன் பின் சுந்தர் சியின் அலுவலகத்திற்குச் சென்ற ஹிப் ஹாப் ஆதியை பார்த்து, “நான் ஆம்பள என்றொரு படம் எடுத்திருக்கிறேன். நீ அதில் ஒரு பாடலை இசையமைத்து கொடுக்க வேண்டும்” என சுந்தர் சி கேட்டாராம்.

அதற்கு ஆதி, “நான் கம்போஸ் செய்தால் முழு படத்திற்கும்தான் கம்போஸ் செய்வேன். அதில் இடம்பெறும் 6 பாடல்களையும் கம்போஸ் செய்து தருகிறேன்” என விடாப்பிடியாக நின்றாராம். அதற்கு சுந்தர் சியும் சரி என்று கூறிவிட்டு, “எனக்கு ஒரு பாடலை மட்டும் இப்போது கம்போஸ் செய்து காட்டமுடியுமா?” என கேட்டாராம். அதற்கு ஆதி, “நான் என்னுடைய ஸ்டூடியோவில்தான் கம்போஸ் செய்வேன், நீங்கள் என்னுடைய ஸ்டூடியோவிற்கு வாருங்கள்” என்று கூறினாராம். சுந்தர் சியும் சரி என்று கூறியிருக்கிறார்.
இதுதான் ஸ்டூடியோவா?
ஆதி, சுந்தர் சியின் அலுவலகத்தில் இருந்து தனது ஸ்டூடியோவுக்கு சென்ற அடுத்த அரைமணி நேரத்தில் சுந்தர் சி அங்கு இருந்தாராம். உள்ளே நுழைந்த சுந்தர் சிக்கு ஆதியின் ஸ்டூடியோவை பார்த்ததும் அதிர்ச்சி ஏற்பட்டுவிட்டதாம். ஏனென்றால் அது முறையான ஸ்டூடியோவே இல்லையாம். ஒரு டைனிங் டேபிளில் இசையமைப்பதற்கான உபகரணங்களை வைத்து ஸ்டூடியோவாக ஆக்கியிருந்தார் ஹிப் ஹாப் ஆதி. “இதுதான் ஸ்டூடியோவா?” என கேட்டாராம்.

அதன் பின் ஹிப் ஹாப் ஆதி ஒரே ஒரு பாடலை மட்டும் கம்போஸ் செய்து தர, அந்த பாடல் சுந்தர் சிக்கு பிடித்துவிட்டதாம். அதன் பின் அந்த பாடலை விஷாலையும் கேட்கே வைத்திருக்கிறார். அவருக்கும் பிடித்துவிட, 6 பாடல்களையும் ஹிப் ஹாப் ஆதியையே இசையமைக்கச் சொல்லிவிட்டாராம்.