திருப்புமுனையை ஏற்படுத்திய விக்ரமன்
நடிகர் விஜய்யின் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் “பூவே உனக்காக”. இத்திரைப்படத்தை இயக்கியவர் விக்ரமன். இத்திரைப்படம் விஜய்யின் கெரியரை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றது. இத்திரைப்படத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் வெகுகாலம் கழித்து “உன்னை நினைத்து” திரைப்படத்தின் மூலம் இணைந்தார்கள். ஆனால் அத்திரைப்படத்தில் இருந்து சில நாட்களிலேயே வெளியேறினார் விஜய்.

விக்ரமனுக்கும் விஜய்க்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம்
“உன்னை நினைத்து” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே விஜய் அத்திரைப்படத்தில் இருந்து வெளியேறினார். இதற்கான காரணம் குறித்து பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
“விக்ரமனை பொறுத்தவரை தயாரிப்பாளருக்கு ஆதரவாகத்தான் தனது திரைப்படங்களில் செயல்படுவார். படத்திற்கு அதிகமாக செலவழிப்பது அவருக்கு பிடிக்காது. கதாநாயகனுடைய உடைகளை எல்லாம் அவர்தான் தேர்வு செய்வார்.

உடைகள் பளிச்சென்று இருந்தால் போதுமே தவிர விலை உயர்ந்த உடைகளை எல்லாம் வாங்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நினைப்பவர் விக்ரமன். ஆதலால் உன்னை நினைத்து திரைப்படத்திலே விஜய் நடித்தபோது அவருக்காக சில உடைகளை எல்லாம் தேர்வு செய்து வைத்திருந்தார் விக்ரமன். விக்ரமன் தேர்வு செய்து வைத்திருந்த உடைகளை எல்லாம் அணிவதிலே விஜய்க்கு கொஞ்சம் விருப்பம் இல்லாமல் இருந்தது. இதில்தான் அவர்கள் இருவருக்குமிடையே பிரச்சனை தொடங்கியது” என விஜய் அத்திரைப்படத்தில் இருந்து வெளியேறிய காரணத்தை பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார். அதன் பிறகு இத்திரைப்படத்தில் சூர்யா நடித்து இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.