ஏ.ஆர்.ரஹ்மான் VS இளையராஜா
1970களில் இருந்து தமிழ் சினிமா இசை ரசிகர்களின் மனதை கட்டிப்போட்ட இளையராஜாவின் இசையை கொஞ்சம் பின்னுக்குத் தள்ளியது ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என்று பல இசை விமர்சகர்கள் கூறுவது உண்டு. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் படமான “ரோஜா” திரைப்படத்தின் பாடல்களின் தரம் மிகவும் துல்லியமாக இருந்தது. இளையராஜா இசையில் இல்லாத ஏதோ ஒரு வசியம் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்ததாகவே ரசிகர்கள் கூறுகின்றனர்.

காரணம் என்ன?
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணனிடம் ரசிகர் ஒருவர், “ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் திரைப்படமான ரோஜா திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அவ்வளவு கிளாரிட்டியாக இருக்கிறது. முதல் படத்திலேயே அவரால் எப்படி இவ்வளவு துல்லியமாக பாடல்களை கொடுக்க முடிந்தது. இளையராஜாவினால் ஏன் இதை செய்ய முடியவில்லை?” என்று ஒரு கேள்வி கேட்டார்.

அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன், “ஏ.ஆர்.ரஹ்மான் ரோஜா படத்திற்கு இசையமைப்பதற்கு முன்பே பல நூறு விளம்பர படங்களுக்கு இசையமைத்த அந்த அனுபவம் இருந்தது. அதுமட்டுமில்லாமல் கணிணி தொழில்நுட்பம் தெரிந்த ஒரு இசையமைப்பாளராகவும் இருந்தார். அதன் காரணமாகத்தான் அவரது இசை அந்தளவுக்கு துல்லியமாக முதல் படத்திலேயே அமைந்திருந்தது” என்று பதிலளித்தார்.