ரவி மோகனின் வித்தியாசமான கதாபாத்திரம்
ஜெயம் ரவியில் இருந்து ரவி மோகனாக தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டவர் சமீப காலமாக மிகவும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். சுதா கொங்கராவின் “பராசக்தி” திரைப்படத்தில் வில்லனாக நடித்து வரும் ரவி மோகன், “கராத்தே பாபு”, “ஜீனி” ஆகிய திரைப்படங்களில் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த நிலையில் “ஜீனி” திரைப்படம் இன்னும் வெளியாகாதது குறித்த ஒரு முக்கிய தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

இதுதான் காரணம்…
“ஜீனி திரைப்படத்தை பொறுத்தவரை அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துவிட்டது. சரியான வெளியீட்டுத் தேதிக்காகத்தான் அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் காத்துக்கொண்டிருக்கிறார்” என சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.
அலாவுதீனும் அற்புத விளக்கும் கதையை நாம் அனைவரும் கேள்விபட்டிருப்போம். அதில் அலாவுதீனின் கையில் கிடைக்கும் விளக்கிற்குள் இருந்து வெளியே வரும் ஜீனி அலாவுதீனின் ஆசைகளை நிறைவேற்றும். அந்த ஜீனி கதாபாத்திரத்தை மையமாக வைத்துதான் ரவி மோகனின் “ஜீனி” திரைப்படம் உருவாகி வருகிறது.

இதில் ஜீனியாக ரவி மோகனே நடிக்கிறார். இவருடன் கிரீத்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்சன், வாமிக்கா கப்பி, தேவயானி போன்றோர் நடித்துள்ளனர். அர்ஜுனன் ஜூனியர் என்பவர் இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.