STR 50
இன்று சிலம்பரசனின் 42 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது 50 ஆவது திரைப்படம் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேசிங்கு பெரியசாமி இயக்கும் இத்திரைப்படத்தை சிம்புவே தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இத்திரைப்படம் ஏற்கனவே சிலம்பரசனின் 48 ஆவது திரைப்படமாக அறிவிக்கப்பட்டது. அப்போது இத்திரைப்படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது.

ஆனால் பட்ஜெட் மிக அதிகம் என்பதால் கமல்ஹாசன் இத்திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து இத்திரைப்படம் டிராப் ஆனதாக கூட செய்திகள் பரவின. இந்த நிலையில்தான் இத்திரைப்படத்தை சிலம்பரசனே தயாரிக்க முன்வந்துள்ளார்.
ரஜினியிடம் இருந்து கைமாறிய கதை
தேசிங்கு பெரியசாமி சிம்புவை வைத்து இயக்க உள்ள இத்திரைப்படத்தின் கதை முதலில் ரஜினிகாந்திற்கே சென்றது. அதாவது இந்த கதையை முதலில் ரஜினிகாந்திடமே கூறினார் தேசிங்கு பெரியசாமி. ரஜினிகாந்தும் இத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்துவிட்டார். அதன் பிறகுதான் இந்த கதையை சிம்பு தேர்வு செய்தார். இத்திரைப்படம் வரலாற்று புனைவு திரைப்படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் விகே சுந்தர் “தேசிங்கு பெரியசாமி கூறிய கதையில் பிளாஷ்பேக் பகுதியில் மிக பிரம்மாண்டமான காட்சிகள் எழுதப்பட்டிருந்தது. இந்த காட்சிகளை எல்லாம் சரியாக கையாண்டுவிடுவாரா என தேசிங்கு பெரியசாமி மீது ரஜினிகாந்திற்கு நம்பிக்கை இல்லாமல் போனது. அதனால்தான் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிக்கவில்லை” என்று பகிர்ந்துகொண்டார்.