மோகன்லாலின் எம்புரான்…
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லாலின் நடிப்பில் உருவாகியுள்ள “எம்புரான்” திரைப்படம் வருகிற 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் மோகன்லாலுடன் பிரித்விராஜ், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் உட்பட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2019 ஆம் ஆண்டு பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாகும். இத்திரைப்படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்தது. ஆனால் தற்போது இத்திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்திருக்கும் நிலையில் அந்த டிரைலரில் லைகா நிறுவனத்தின் பெயர் இடம்பெறவில்லை.

வெளியேறிய லைகா…
அதாவது ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனத்திற்கும் லைகா நிறுவனத்திற்கும் இடையே சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டதாம். ஆசீர்வாத் சினிமாஸ் லைகா நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுக்கவேண்டியதாக இருந்ததாம். இதன் இடையில் பிரபல சினிமா விநியோகஸ்தரான கோகுலம் கோபாலன் இவர்களின் சிக்கலை தீர்க்கும் வகையில் ஆசீர்வாத் சினிமாஸ் லைகாவிற்கு கொடுக்க வேண்டிய பணத்தை தான் பார்த்துக்கொள்வதாக லைகாவிடம் கூறிவிட்டாராம்.

அதாவது லைகா நிறுவனம் இதற்கு முன் கோகுலம் கோபாலனிடம் அதிகளவு பணம் வாங்கியுள்ளதாம். ஆதலால் லைகா நிறுவனம் கோகுலம் கோபாலனுக்கு பணம் தரவேண்டியிருக்கிறதாம். இந்த நிலையில்தான் “எம்புரான்” பட சிக்கலுக்குள் தலையிட்டு ஆசீர்வாத் சினிமாஸ் கொடுக்க வேண்டிய பணத்தை தான் பார்த்துகொள்வதாக கூறி லைகாவை இதில் இருந்து வெளியேற்றிவிட்டாராம் கோபாலன். தற்போது “எம்புரான்” திரைப்படம் கோகுலன் கோபாலனும் ஆசீர்வாத் சினிமாஸும் இணைந்து மக்களிடையே கொண்டுவந்திருக்கிறார்கள்.