ராக்ஸ்டார் அனிருத்
அனிருத் தற்போது தென்னிந்தியாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருகிறார். “3” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் தனது முதல் திரைப்படத்திலேயே தமிழ் இசை ரசிகர்களின் மனதை கவர்ந்த இசையமைப்பாளராக உருமாறினார். இவரது “வொய் திஸ் கொலவெறி” பாடல் 2012 ஆம் ஆண்டு இணையம் அரிதான ஒன்றாக இருந்த காலகட்டத்திலேயே உலகம் முழுவதும் அதிக பார்வையாளர்களை ஈர்த்து சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்து தற்போது தென்னிந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்துள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கான Most Wanted இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார் அனிருத். அதுமட்டுமல்லாது பாலிவுட்டில் ஷாருக்கான் நடித்த “ஜவான்” திரைப்படத்திற்கும் அனிருத் இசையமைத்திருந்தார்.
பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே இசையமைக்கும் அனிருத்?
இந்த நிலையில் ரசிகர் ஒருவர் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம், “அனிருத் பெரிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு மட்டுமே இசையமைக்கிறார். ஏன் சின்ன பட்ஜெட் திரைப்படங்களுக்கு இசையமைப்பதில்லை?” என கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு சித்ரா லட்சுமணன், “அனிருத்தை பொறுத்தவரை முதல் வரிசை கதாநாயகர்களுக்கு மட்டுமே இசையமைக்கும் இசையமைப்பாளர் என்று சொல்லிவிட முடியாது. பல சின்ன சின்ன திரைப்படங்களுக்கெல்லாம் அவர் இசையமைத்திருக்கிறார். ஆனால் இப்போது அவர் இருக்கும் நிலைமை அப்படி. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பல முக்கியமான திரைப்படங்களுக்கு இசையமைக்க வேண்டிய பணிகள் இருப்பதனால் சின்ன பட்ஜெட் திரைப்படங்களை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுதான் உண்மை” என பதிலளித்துள்ளார்.