ரேஸில் ரொம்ப பிசி…
அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் கார் பந்தயங்களில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். ஆதலால் அடுத்த ஆண்டுதான் அவர் திரைப்பட படப்பிடிப்புகளில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது. அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி வெளிவரவுள்ளது.
அஜித்குமார் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பு பெற்றிருந்த நிலையில் “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

அஜித்குமார்-கார்த்திக் சுப்பராஜ் கூட்டணி
“குட் பேட் அக்லி” திரைப்படத்தை அடுத்து அஜித்குமார் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வந்தது. இந்த தகவலால் ரசிகர்கள் குஷியில் மூழ்கினர். ஆனால் இத்தகவலை குறித்து ஒரு அதிர்ச்சியான உண்மை ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.
சுவைநயம் மிக்க கற்பனை
இந்த நிலையில் நேயர் ஒருவர் அஜித்குமார் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக வெளிவரும் தகவல் உண்மையா என தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு சித்ரா லட்சுமணன், “வலைத்தளங்களில் அவ்வப்போது இது போன்ற கற்பனையான ஆனால் சுவையான தகவல்கள் வெளிவருவது உண்டு. அப்படிப்பட்ட தகவலாகத்தான் இதையும் நான் பார்க்கிறேன்” என்று பதிலளித்துள்ளார்.

இதன் மூலம் அஜித்குமார் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மைத்தன்மை இல்லை என தெரிய வருகிறது. அதுபோல் தனுஷ் அஜித்குமாரை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக வெளிவரும் தகவல் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.