தளபதி
கடந்த 1991 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மம்மூட்டி ஆகியோரின் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து பாக்ஸ் ஆஃபீஸில் பட்டையை கிளப்பிய திரைப்படம் “தளபதி”. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டி கதாபாத்திரத்திற்கும் இடையே ஏற்படும் நட்பு காலம் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ரீரிலீஸ்
இன்று ரஜினிகாந்தின் 74 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு “தளபதி” திரைப்படம் பல திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யப்பட்டது. ரீரிலீஸிற்கான அறிவிப்பு வந்தபோதே ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு அத்திரைப்படத்திற்காக காத்துக்கொண்டிருந்தனர். இந்த பிறந்தநாளை “தளபதி” திரைப்படத்தோடு சிறப்பாக கொண்டாடிவிடலாம் என நினைத்திருந்தனர்.
ஏமாற்றம்

ஆனால் இன்று ரீரிலீஸ் செய்யப்பட்ட “தளபதி” திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் “இதை ரிலீஸ் பண்ணாமலே இருந்துருக்கலாம்” என சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர். அதாவது படத்தில் சில காட்சிகளை வெட்டி தூக்கி இருக்கிறார்கள். அதே போல் படத்தின் வீடியோ மற்றும் ஆடியோ தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். “இதற்கு டிவியிலேயே படத்தை பார்த்து விடலாம்” என ரசிகர்கள் மனம் நொந்து போய் தங்களது சோகங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.