2K Love Story
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கமெர்சியல் இயக்குனராக திகழ்ந்து வருபவர் சுசீந்திரன். இவர் தற்போது இயக்கியுள்ள “2K லவ் ஸ்டோரி” திரைப்படம் கடந்த 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளிவந்தது. ஆனால் இத்திரைப்படம் ஓரளவு சுமாரான வரவேற்பையே பெற்றிருந்தது. இத்திரைப்படத்தில் ஜகவீர், மீனாட்சி கோவிந்தராஜ், சிங்கம்புலி, பாலசரவணன் போன்ற பலரும் நடித்திருந்தனர்.

சீரியல் நடிகை…
இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த மீனாட்சி கோவிந்தராஜ், சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு “சரவணன் மீனாட்சி”, “வில்லேஜ் டூ வில்லா” போன்ற தொலைக்காட்சி தொடர்களில் இடம்பெற்றிருந்தார். அதன் பின் சுசீந்திரன் இயக்கிய “கென்னடி கிளப்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த நிலையில் “2K Love Story” திரைப்படத்தின் புரோமோஷன் பேட்டியில் கலந்துகொண்ட சுசீந்திரன் மீனாட்சி கோவிந்தராஜ் குறித்து பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிக்கவே விட்டிருக்கமாட்டேன்…
“மீனாட்சி கோவிந்தராஜ் ஒரு சீரியல் நடிகை என்று தெரிந்திருந்தால் எனது படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்திருக்க மாட்டேன். ஏனென்றால் சீரீயல் நடிகை சினிமாவில் நடித்தால் மிகவும் தரக்குறைவாக பார்க்கும் வழக்கம் இங்கு உள்ளது. நானே சீரியலில் இருந்து வந்தவன்தான்” என கூறினார். இதனை அருகில் அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்த மீனாட்சி கோவிந்தராஜ், “ஏன் நாங்களும் நடிகர்கள்தானே” என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த சுசீந்திரன், “ஆமாம். ஆனால் வியாபார நோக்கில் அப்படி ஒரு எண்ணம் இங்கே நிலவுகிறது” என்று கூறி அவருக்கு புரியவைத்தார்.