சமூக சேவை
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்பதும் அவர் அகரம் அறக்கட்டளை மூலம் பல ஏழை குழந்தைகளை படிக்க வைக்கிறார் என்பதும் பலரும் அறிந்ததே. இவ்வாறு சமூக சேவையில் ஈடுபட்டு வரும் சூர்யா குறித்த ஒரு அசாதாரண சம்பவத்தை தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் பாடகரும் இசையமைப்பாளருமான கிரிஷ்.

உயிர் பிழைக்க வைத்த சூர்யா
பாடகர் கிரிஷ் நடிகர் சூர்யா நடித்த “சிங்கம் 3” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா நெல்லூரில் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் படக்குழுவினர் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணமாகிக்கொண்டிருந்தனராம். அப்போது நடு ரோட்டில் ஒருவருக்கு விபத்து நேர்ந்து தலையில் அடிபட்டு ரத்தம் அதிகமாக வெளியேற உயிருக்கு போராடிக்கொண்டிருந்தாராம்.
அந்த நபரை சுற்றி பலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க எவருமே உதவ முன் வரவில்லை. அந்த சமயத்தில் சூர்யா தனது காரை நிறுத்தச்சொல்லி அடிபட்டு கிடந்தவரை காரில் ஏற்றி வைத்து டிரைவரை திருப்பதி சிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சொன்னாராம். அங்குள்ள பல மருத்துவர்களை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு தகுந்த சிகிச்சையை அளிக்க சொன்னாராம். அந்த நபர் அதன் பின் தகுந்த சிகிச்சையின் காரணமாக உயிர் பிழைத்திருக்கிறார்.