ஏமாற்றிய கங்குவா!
கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் தேதி சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட உருவாக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “கங்குவா”. இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் கதாநாயகி திசா படானி நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் பாபி தியோல், நட்டி, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

கிட்டத்தட்ட ரூ.400 கோடி பொருட்செலவில் உருவாகிய இத்திரைப்படம் 3D தொழில்நுட்பத்தில் வெளியானது. மேலும் சூர்யா ஒரு Fantasy திரைப்படத்தில் நடித்ததும் மக்களுக்கு ஒரு ஆர்வத்தை உண்டு செய்தது. ஆனால் இத்திரைப்படம் வெளிவந்த பிறகு மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஏமாற்றத்திற்குள்ளானது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை “கங்குவா” பூர்த்தி செய்யத் தவறிவிட்டதாகவே தகவல்கள் வெளியானது. குறிப்பாக இத்திரைப்படத்தின் பின்னணி இசையும், கதாபாத்திரங்கள் பேசுகிற வசனமும் ரசிகர்களின் காதுகளுக்கு எரிச்சலை ஊட்டுவது போல் அமைந்திருந்ததாகவும் ரசிகர்கள் கூறினர்.
சூர்யாவின் மாஸ்டர் பிளான்?
இவ்வாறு மிகவும் மோசமான விமர்சனங்களை எதிர்கொண்ட “கங்குவா” திரைப்படம் படக்குழுவினரை திருப்திப்படுத்தவில்லை. குறிப்பாக இத்திரைப்படத்திற்காக தனது உடலை வருத்திக்கொண்டு நடித்த சூர்யாவுக்கு மிகப் பெரும் வருத்ததை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யா மிகவும் துணிச்சலான ஒரு முடிவை எடுத்திருப்பதாக ஒரு ஆச்சரிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இனி வரும் காலங்களில் தான் ஒப்பந்தமாகும் திரைப்படங்களை தானே முடிவெடுக்கப்போவது இல்லையாம்.
பாலிவுட் நடிகர் சல்மான் கானிடம் கதை ஆலோசகராக பணிபுரிந்த ஒரு நபரை தன்னுடைய கதை ஆலோசகராக பணிக்கு அமர்த்தவுள்ளாராம் சூர்யா. இனி தனது திரைப்படங்களுக்காக கதை கேட்கும் பொறுப்பை அந்த நபரிடம் விட்டுவிடப்போகிறாராம் சூர்யா. இவ்வாறு ஒரு தகவல் கோலிவுட் வட்டாரங்களில் வலம் வருகிறது. இனிமேலாவது சூர்யாவின் கெரியர் ஏறுமுகமாக இருக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.