90’ஸ் கிட்ஸின் ஃபேவரைட் திரைப்படம்…
2002 ஆம் ஆண்டு முரளி, வடிவேலு, ராதா ஆகியோரின் நடிப்பில் வெளியாகி அட்டகாசமான வெற்றியை பெற்ற திரைப்படம் “சுந்தரா டிராவல்ஸ்”. ஒரு பேருந்தை மையமாக வைத்து பின்னப்பட்ட கதையில் நகைச்சுவையான பல அம்சங்களை இணைத்து மிகவும் அசத்தலான ஒரு காமெடி டிராமா திரைப்படமாக வெளிவந்த இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்திழுந்தது.

இப்போதும் 90களில் பிறந்தவர்களுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக “சுந்தரா டிராவல்ஸ்” அமைந்துள்ளது. இத்திரைப்படம் மலையாளத்தில் வெளிவந்த “ஈ பறக்கும் தாளிகா” என்ற திரைப்படத்தின் ரீமேக் ஆகும். “சுந்தரா டிராவல்ஸ்” திரைப்படத்தை தாஹா என்பவர் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் வடிவேலுவின் காமெடி காட்சிகள் காலம் தாண்டியும் ரசிக்கவைக்கும்படியாக இருக்கும்.
முக்கியமான கதாபாத்திரம்…
இத்திரைப்படத்தில் இது அனைத்தையும் தாண்டி ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருக்கிறது. அதுதான் எலி. இந்த எலி வடிவேலுவின் பாஸ்போர்ட்டை கடித்துவிடும். ஆதலால் வடிவேலு வெளிநாட்டுக்கு போகமுடியாமல் ஆகிவிடும். இந்த காரணத்தால் அந்த எலி எப்போதெல்லாம் தென்படுகிறதோ அப்போதெல்லாம் வடிவேலு அந்த எலியை அடித்து கொல்ல முயற்சி செய்வார். இந்த காட்சிகளால் விளையும் சம்பவங்கள் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தன.

ஷூட்டிங்ல குறுக்க மறுக்க ஓடிட்டு இருப்பார்…
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார் “சுந்தரா டிராவல்ஸ்” நாயகி ராதா. அப்போது அவர் பேசுகையில், “இந்த படத்தில் முக்கியமான நடிகர் ஒருவர் இருந்தார். அவர்தான் எலி. உண்மையான எலியை இத்திரைப்படத்தில் பயன்படுத்தி இருந்தார்கள்.
படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருக்கும்போது அவர் வேறு குறுக்க மறுக்க ஓடிக்கொண்டு இருப்பார். அவருடைய அலப்பறை தாங்கமுடியாது. அவரை பார்த்துக்கொள்ள ஒரு உதவியாளரும் இருப்பார். அவருக்கு தனி உணவு என பில்டப் பயங்கரமாக இருக்கும். எப்படியோ அந்த எலியை வைத்து படத்தை முடித்துவிட்டார்கள்” என படப்பிடிப்பு தளத்தின் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.