மாடர்ன் தியேட்டர்ஸ்
தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான சினிமா தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்து வந்த நிறுவனம் “மாடர்ன் தியேட்டர்ஸ்”. இந்த நிறுவனம் 1935 ஆம் ஆண்டு டி.ஆர்.சுந்தரம் என்பவரால் தொடங்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டு வரையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, சிங்களம் போன்ற பல மொழிகளில் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களை டி.ஆர்.சுந்தரம் தயாரித்துள்ளார். இந்த நிலையில் டி.ஆர்.சுந்தரம் தனது மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திற்குள் வைத்திருந்த கட்டுப்பாடுகள் குறித்து பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

ஸ்டூடியோவை விட்டு வெளிய போகக்கூடாது!
அக்காலகட்டத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும் அதில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தாராம் டி.ஆர்.சுந்தரம். “மாடர்ன் தியேட்டர்ஸை பொறுத்தவரை படப்பிடிப்பு நடக்கும்போது படப்பிடிப்பு தளம் உள்புறமாக தாழிடப்பட்டிருக்கும். யாரும் அந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வளவு எளிதாக வெளியே செல்ல முடியாது.

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் நடிக்கின்ற நடிகர்கள் எவ்வளவு பெரிய நட்சத்திரங்களாக இருந்தாலும் அவர்களை தேடி உணவு போகாது, உணவு எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்திற்கு வந்துதான் எல்லோரும் சாப்பிட வேண்டும். நேரக்கட்டுப்பாடு என்பது மிகவும் முக்கியமானது. ஒப்பனைக்கோ படப்பிடிப்பிற்கோ நேரத்திற்குள் ஒரு கலைஞர் வரவில்லை என்றால் உடனடியாக அந்த கலைஞர் மாற்றப்பட்டு விடுவார்.
ஒரு படத்திற்கான கதை வசனத்தை முழுவதுமாக எழுதி முடிக்கப்பட்ட பின்புதான் அந்த கதைக்கான நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நட்சத்திரங்களுக்காக கதையில் எந்த மாற்றமும் செய்யப்படாது. இப்படி பல கட்டுப்பாடுகளுடன் மாடர்ன் தியேட்டர்ஸை நிர்வகித்தார் டி.ஆர்.சுந்தரம்” என்று தனது வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார் சித்ரா லட்சுமணன்.