இசையில் வாழும் எஸ்.பி.பி
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடலால் நம்மை விட்டு மறைந்தாலும் இசையால் நம் மனதில் என்று வாழ்ந்துகொண்டிருப்பவர். இந்த நிலையில் பிரபல பாடகரான கிரிஷ் தனது பேட்டி ஒன்றில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

5 மணி நேரம் பாடிய எஸ்.பி.பி
அமெரிக்காவில் கான்செர்டில் பாடுவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை நியூ யார்க்கிற்கு சென்றிருக்கிறார் எஸ்.பி.பி. அந்த சமயத்தில் பாடகர் கிரிஷ், நியூ யார்க்கில் படித்துக்கொண்டிருந்தாராம். கிரிஷ் ஒரு டிராவல் ஏஜென்சியில் கார் டிரைவராக பகுதி நேரமாக வேலை பார்த்திருக்கிறார். இந்தியாவை சேர்ந்த பல சினிமா பிரபலங்கள் அமெரிக்கா சென்றால் அமெரிக்காவிற்குள் பயணிக்க அந்த டிராவல் ஏஜென்சியைதான் அணுகுவார்களாம். அந்த வகையில் ஒரு நாள் எஸ்.பி.பி நியூயார்க்கில் கச்சேரியை முடித்து வாசிங்க்டன் டிசியில் மற்றொரு கச்சேரிக்கு செல்ல வேண்டியிருந்திருக்கிறது.

ஆனால் எஸ்.பி.பி. வாசிங்க்டன் டிசி போவதற்கான விமானத்தை தவறவிட்டிருக்கிறார். ஆதலால் கிரிஷ் வாசிங்க்டன் டிசி வரை எஸ்.பி.பிக்கு டிரைவராக வந்திருக்கிறார். கிட்டத்தட்ட 5.30 மணி நேர பயணம்.
எஸ்.பி.பி. “சொல்லு உனக்காக என்ன பண்ணனும்?” என கேட்க அதற்கு கிரிஷ், “எனக்காக ஒரு பாடல் பாடவேண்டும்” என கூற, எஸ்.பி.பியோ கிட்டத்தட்ட 5 மணி நேரம் கிரிஷிற்காக பல பாடல்களை பாடியிருக்கிறார். இந்த சம்பவத்தை நெகிழ்ச்சியோடு தனது பேட்டியில் பகிர்ந்துள்ளார் பாடகர் கிரிஷ்.