உழைப்பே உயர்வு
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்களிடம் அறிமுகமான சூரி, தற்போது தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகனாக உருமாறி உள்ளார். இந்த வளர்ச்சி அவருக்கு எளிதில் கிடைத்த ஒன்று அல்ல. அவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே சினிமா படப்பிடிப்புகளில் பெயின்டர், எலெக்டிரீசியன் என பல துறைகளில் பல திரைப்படங்களில் வேலை பார்த்திருக்கிறார். அந்த வகையில் படையப்பா திரைப்படத்தில் வேலை பார்த்தது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அத்திரைப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் பகிர்ந்துகொண்டார் சூரி.

உங்க படத்துல வேலை பார்த்துருக்கேன் சார்….
“விடுதலை 2” திரைப்படத்தின் புரொமோஷனுக்காக கே.எஸ்.ரவிக்குமாருடன் ஒரு பேட்டியில் கலந்துகொண்டபோது சூரி, “உங்க படத்துல வேலை பார்த்துருக்கேன் சார் நானு” என கூற, அதற்கு கே.எஸ்.ரவிக்குமார் “என் படத்துலயா?” என ஆச்சரியப்பட்டார்.

அதன் பின் பேசத் தொடங்கிய சூரி, “படையப்பா பட ஷூட்டிங்கில் மைக், ஃபேன் போடுபவராக வேலை செய்தேன். வில்லன் படத்தில் நடிப்பதற்காக உங்கள் அலுவலகத்திற்கு வாய்ப்பு தேடி வந்திருக்கிறேன். உங்கள் அலுவலகத்தில் ரேஷன் கடை அடுத்த தெரு வரை வரிசை நிற்கும்” என்று கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் ரசிகர்கள் பலரும் வியப்புடன் சூரியின் உழைப்பை புகழ்ந்து வருகின்றனர்.