விடுதலை 2
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்த “விடுதலை 2” திரைப்படம் நேற்று உலகமெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இதில் சூரியுடன் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன் உட்பட பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தின் முதல் பாகத்திற்கு எந்தளவுக்கு வரவேற்பு இருந்ததோ அதே அளவுக்கான வரவேற்பு இதன் இரண்டாம் பாகத்திற்கும் கிடைத்துள்ளது.

சிறப்பான நடிப்பு
“விடுதலை” முதல் பாகம் முழுக்க சூரி கதாபாத்திரத்தை மையமாக வைத்தே கதை நகரும். தற்போது வெளிவந்துள்ள இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் வாத்தியார் கதாபாத்திரத்தை மையமாக வைத்து கதை நகர்கிறது. விஜய் சேதுபதி அவருக்கு ஜோடியாக நடித்த மஞ்சு வாரியர் ஆகியோர் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கென் கருணாஸின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
வருங்கால சூப்பர் ஸ்டார்
இந்த நிலையில் நடிகர் சூரி “விடுதலை 2” திரைப்படத்தை திரையரங்கில் பார்த்துவிட்டு வெளியே பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தபோது, அங்கே கூடியிருந்த கூட்டத்தில் இருந்த ரசிகரில் ஒருவர், “எங்கள் தளபதி, வருங்கால சூப்பர் ஸ்டார்” என்று கூச்சலிட்டார். உடனே சூரி கையெடுத்து கும்பிட்டு, “உங்களில் ஒருத்தனாகவே இருக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.
