நாயகன் சூரி
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக பலராலும் அறியப்பட்ட சூரி, வெற்றிமாறனின் “விடுதலை” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார். அத்திரைப்படத்தில் கான்ஸ்டபிள் குமரேசன் என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் ஒரு நாயகனாக அமர்ந்தார்.

“விடுதலை” திரைப்படத்தை தொடர்ந்து “கருடன்”, “கொட்டுக்காளி” ஆகிய திரைப்படங்களில் நாயகனாக நடித்தார். அதனை தொடர்ந்து “விடுதலை 2” திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது.
புதிய படம்
இந்த நிலையில் சூரி தற்போது மேலும் ஒரு புதிய திரைப்படத்தில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு “மாமன்” என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இதில் சூரிக்கு ஜோடியாக “பொன்னியின் செல்வன்” பூங்குழலி புகழ் ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க உள்ளார். “விலங்கு” வெப் சீரீஸை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இத்திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இத்திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் விரைவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.