கிளாசிக் இயக்குனர்
“பகல் நிலவு” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மணிரத்னம், அதனை தொடர்ந்து “மௌன ராகம்”, “நாயகன்”, “அக்னி நட்சத்திரம்”, “தளபதி”, “ரோஜா”, “பம்பாய்”, “அலைபாயுதே” போன்ற பல கிளாசிக் திரைப்படங்களை கொடுத்தவர். தனது “ரோஜா” திரைப்படத்தின் மூலம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர்.

புதிய இசை
“ரோஜா” திரைப்படத்தின் பாடல்களை கேட்ட பல ரசிகர்கள் “இது என்ன இவ்வளவு புதுசா இருக்கே” என வியந்துபோயினர். அந்தளவுக்கு தனது முதல் திரைப்படத்தின் மூலம் தனது தனித்துவமான நவீன இசையால் ரசிகர்களை கட்டுக்குள் போட்டுக்கொண்டார். 30 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்று வரை அந்த இசைப்புயல் ஓயவே இல்லை.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பாடகர் ஸ்ரீநிவாஸ், “ரோஜா திரைப்படம் வெளிவந்தபோது அத்திரைப்படத்திற்கு இளையராஜாதான் இசையமைத்திருப்பார் என்று நினைத்துதான் திரையரங்கத்திற்கு சென்றேன். ஆனால் இசையை கேட்டவுடன் இந்த படத்துக்கு இளையராஜா மியூசிக் போடவில்லை என புரிந்துகொண்டேன். இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்று தெரிந்தவுடன் ஏ.ஆர்.ரஹ்மானா? யார் அது? இவ்வளவு அழகான இசையை அமைத்தது? என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்” என கூறியுள்ளார்.