அதிரடி சமையல்
தமிழகத்தில் மிகவும் பிரபலமான கராத்தே மாஸ்டராக வலம் வந்தவர் ஷிஹான் ஹூசைனி. இவரின் அதிரடி சமையல் நிகழ்ச்சி இப்போதும் 90ஸ் கிட்களால் ரசித்து பார்க்கப்பட்டக்கூடிய ஒன்றாகும். இவர் “புன்னகை மன்னன்”, “வேலைக்காரன்”, “பறவைகள் பலவிதம்”, “வேடன்”, “பத்ரி”, “காத்துவாக்குல ரெண்டு காதல்” போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். “பிளட் ஸ்டோன்” என்ற ஹாலிவுட் படத்தில் கூட இவர் நடித்திருந்தார்.

இவர் பல அசாத்தியமான செயல்களில் ஈடுபட்டு பல கின்னஸ் உலக சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். இவர் ஜெயலலிதாவின் மீது தீராத அன்பு கொண்டவர். தனது இரத்தத்தை வைத்து ஜெயலலிதாவின் உருவத்தை 58 வெவ்வேறு ஓவியங்களாக வரைந்து தமிழகத்தையே அதிர வைத்தார். இது போல் தன் உடலை வருத்திக்கொண்டு பல அதிரடியான செயல்களில் அவ்வப்போது ஈடுபடுவார். சமீப காலமாக பலருக்கும் வில்வித்தை பயிற்சிகளை அளித்து வந்தார்.
இரத்த புற்றுநோய்
இந்த நிலையில் திடீரென உடல்நிலை சரியில்லாமல் சென்னை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இரத்த புற்றுநோய் இருப்பதாக தெரிய வந்தது. தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் அவர், தனது உடல்நிலையை குறித்து அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களுக்கு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவிட்டிருந்த வீடியோ ஒன்றில், “நான் இறந்த மூன்று நாட்களுக்குப் பிறகு எனது உடலை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தானம் செய்கிறேன்.இந்த மருத்துவமனையின் நிறுவனரான ஸ்ரீ ராமசாமி உடையார் எனது கராத்தே அமைப்பிற்கு பல வருடங்களாக தலைவராக இருந்தார்.

ஆனால் எனது இதயத்தை மட்டும் பாதுகாப்பதற்காக எனது வில்வித்தை மற்றும் கராத்தே மாணவர்களிடையே ஒப்படைக்க விரும்புகிறேன்” என தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அவர் வெளியிட்ட இன்னொரு வீடியோவில் தனது உடலை தானம் செய்வதற்கான படிவத்தில் கையெழுத்து போட்டுவிட்டதாக தெரிவித்துள்ள அவர், உறுப்புதான ஏற்பாடு செய்வதற்காக தனக்கு உதவிய கலா மாஸ்டருக்கு தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.