அதிரடியான கராத்தே வீரர்
பிரபல கராத்தே வீரரும் நடிகருமான ஷிஹான் ஹுசைனி உடல் நலக்குறைவு காரணமாக சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு இரத்தப்புற்று நோய் இருப்பதாக அறியப்பட்டது. தனது உடல் உறுப்புகளை தானம் செய்த ஹுசைனி தனக்கு சொந்தமான சில பொருட்களையும் தனது நண்பர்களுக்கு அளித்தார்.

தன்னுடைய மரணத்தை பெரிதும் எதிர்பார்த்து துணிவுடன் அதனை எதிர்கொள்ள காத்துக்கொண்டிருந்தார் ஹுசைனி. இந்த நிலையில் இன்று காலை அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவருக்கு இப்படி ஒரு மறுபக்கமா?
ஷிஹான் ஹுசைனி எந்த செயலை செய்தாலும் அதில் ஒரு ஆக்ரோஷம் இருக்கும். தனது உடலை வருத்திக்கொண்டு அவர் செய்த சாதனைகள் பல உண்டு. அதில் மிக முக்கியமானது தனது இரத்தத்தால் ஜெயலலிதாவின் ஓவியங்களை வரைந்தது. இது மட்டுமல்லாது கராத்தே துறையில் பல அசாத்திய சாதனைகளை செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
இந்த நிலையில் இவரை குறித்து மற்றொரு ஆச்சரியமான தகவலும் வெளிவந்துள்ளது. அதாவது இவர் பிராணிகளின் மீது அதிக அன்புடையவராம். நாய் மட்டுமல்லாது குரங்கு, பாம்பு போன்ற பல உயிரினங்களையும் அவர் வளர்த்து வந்தாராம். இது குறித்து ஒரு சம்பவத்தை அவரது நண்பரான சுகா என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
குரங்கை விருந்துக்கு அனுப்பிய ஹுசைனி
சுகாவுக்கு கோபால் என்றொரு நண்பர் இருந்தாராம். கோபால் ஒரு ஒளிப்பதிவாளர். ஹுசைனி கதாநாயகனாக நடித்த “மை இந்தியா” திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் இவர்தான். அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் கோபால் மூலமாக ஹுசைனியிடம் தொலைப்பேசியில் பேசுவதற்கு சுகாவுக்கு வாய்ப்பு கிடைத்ததாம்.

இவ்வாறு ஒருநாள், கோபால் சுகாவுக்கு போன் செய்து, “இன்று மதியம் உங்க வீட்டுலதான் சாப்பாடு. உணவுகளை தயார் செய்து வை” என கூறினாராம். சுகாவும் உணவுகளை சமைத்து வைக்க, மதிய நேரத்தில் கோபால் தனது கையோடு குரங்கு ஒன்றை கூட்டி வந்தாராம்.
“பயப்படாதே, உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க ஹுசைனி வருவதாக இருந்தது. ஆனால் அவருக்கு ஒரு முக்கியமான வேலை வந்துவிட்டதனால் அவருக்கு பதிலாக அவரது குரங்கை அனுப்பி வைத்திருக்கிறார்” என்று கூறினாராம் கோபால். ஹுசைனியின் குரங்கு அவர்களுடன் உணவு மேசையில் அமர்ந்து சாப்பாடு அருந்தியதாம். அப்போது ஹுசைனியிடம் இருந்து கோபாலுக்கு போன் வந்தது.
குரங்கை குறிப்பிட்டு பேசிய ஹுசைனி, “அவன் நல்ல பையன். சமத்தான பையன். ஆனா இவனை விட அலெக்ஸ் ரொம்ப சமத்து. உங்க தோள் மேல ஏறிட்டா இறங்கவே மாட்டான்” என கூறினாராம்.
“அதுவும் குரங்குதானா?” என சுகா கேட்க, “இல்லை அது பாம்பு, ஆறு மாதம்தான் ஆச்சு பிறந்து” என ஹுசைனி கூறினாராம். இதனை கேட்டதும் சுகா அதிர்ந்து போய்விட்டாராம். ஹுசைனி இவ்வாறு பல பிராணிகளை செல்லமாக வளர்த்திருக்கிறார் என தெரிய வருகிறது.