நல்ல நடிகர்தான், ஆனால்?
நல்ல திறமையான நடிகராக இருந்தாலும் ஷாமின் கெரியர் இறங்கு வரிசையில் சென்றது என்பது உண்மைதான். “12 B” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஷாமிற்கு, “இயற்கை” திரைப்படம் ஒரு நல்ல அங்கீகாரத்தை கொடுத்தது. ஆனால் அதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படங்கள் அவரது கெரியருக்கு திருப்புமுனையாக அமையவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகர் ஷாம் “ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே” திரைப்படத்தை குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

நீங்களாவது உஷாரா இருங்க…
“ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே படத்தின் கதை அஷோக் ஐயர் என்பவருடையது. அவர் தற்போது உயிருடன் இல்லை. அந்த கதையை நான் 12 B படத்திற்கு முன்பே கேட்டுவிட்டேன். அவர் அந்த கதையை சொன்னபோது அது கல்லூரி சம்பந்தப்பட்ட கதையாக இருந்தது. நான் 12 B நடித்து முடித்த சமயத்தில் கல்லூரி மாணவர்களிடையே எனக்கு நல்ல பாப்புலாரிட்டி இருந்தது.
அந்த காரணத்திற்காகத்தான் அந்த கதையில் நடிக்க ஒப்புக்கொண்டேன். ஒப்புக்கொண்ட பிறகு பார்த்தீர்கள் என்றால் கல்லூரி பின்னணியை படத்தில் இருந்து எடுத்துவிட்டார் இயக்குனர் வஸந்த். நான் எதற்காக அந்த படத்தை ஒப்புக்கொண்டேனோ அதையே அவர் நீக்கிவிட்டார். நான் அவரிடம் சென்று கேட்டபோது அது வேண்டாம் என சொல்லிவிட்டார். அதற்கு காரணம் ஒரு குப்பை காரணம்.

எனினும் அந்த படத்திற்கு 5 இசையமைப்பாளர்கள். 5 பாடல்கள் மெட்டமைத்து கொடுத்தார்கள். ஒரு அவரேஜ் படமாக அது ஓடியது. அந்த Script-ஐ அப்படியே படமாக்கியிருந்தால் அந்த படம் நன்றாக இருந்திருக்கும். இப்போது நான் இதை எல்லாம் இந்த பேட்டியில் சொல்வதற்கு காரணமே, நான்தான் ஏமாந்துவிட்டேன், புதிதாக வருபவர்கள் என் மூலமாக இதையாவது தெரிந்துகொள்ளட்டும் என்பதற்காகத்தான்.
அந்த படம் First Copy Basis-ல் படமாக்கப்பட்டது. அந்த சமயத்தில் First Copy என்றால் என்ன என்று நான் கேட்டேன். படத்தின் முழு பட்ஜெட்டையும் தயாரிப்பாளர் இயக்குனரிடம் கொடுத்துவிடுவார். அதுதான் First Copy என்று கூறினார்கள். இது நல்ல விஷயம்தானே என்று நினைத்தேன். ஆனால் அந்த பணத்தை இயக்குனர் மிச்சப்படுத்திவிடுவார் என்பது எனக்கு அப்போது தெரியாது. ஒரு Film Maker படம் எடுக்கும்போது காசு விஷயம் பார்ப்பார் என்று அப்போது எனக்கு தெரியவில்லை. அந்த வகையில் சமரசம் செய்துகொண்ட படம்தான் அது” என அப்பேட்டியில் ஷாம் கூறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷாம், சினேகா, விவேக் ஆகியோரின் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த “ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றிருந்தாலும் அன்றைய இளைஞர்களின் மத்தியில் மிகப் பிரபலமான திரைப்படமாக அமைந்தது.