நல்ல நடிகர்தான்,ஆனால்…
“12 B” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான ஷாம், அதனை தொடர்ந்து அவர் நடித்த “இயற்கை” திரைப்படம் அவரது கெரியரில் மிகச் சிறந்த திரைப்படமாக அமைந்தது. ஆனால் அதன் பின் அவர் கதாநாயகனாக நடித்த எந்த திரைப்படமும் சரியாக போகவில்லை. ஆதலால் அவரது கெரியர் சற்று சரிவை கண்டது.

எனினும் பல தெலுங்கு திரைப்படங்களில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழில் “தில்லாலங்கடி”, “புறம்போக்கு எங்கிற பொதுவுடைமை”, “வாரிசு” ஆகிய திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் வலம் வந்தார். இவர் கதாநாயகனாக நடித்த “அஸ்திரம்” திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் ஓடாது…
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஷாம், சினிமாவில் ஏற்பட்ட தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் பகிர்ந்துகொண்ட ஒரு சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“நான் ABCD என்று ஒரு திரைப்படத்தில் நடித்தேன். அதில் E என்று ஒரு கதாபாத்திரம் முதலில் இருந்தது. ஆனந்த் (A), பாரதி (B), சந்திரா (C) , திவ்யா (D) என்பது போல் ஈஸ்வரி (E) என்று ஒரு கதாபாத்திரம் இருந்தது. அந்த கதாபாத்திரம்தான் இடைவேளை டிவிஸ்ட். அந்த கதாபாத்திரத்தின் காரணமாகத்தான் அந்த படத்தில் நான் நடிக்கவே ஒப்புக்கொண்டேன்.

இந்த ஏபிசிடியை படமாக்கி முடித்துவிட்டு ஈ கதாபாத்திரத்தை கடைசியாக படமாக்கலாம் என்று இருந்தார்கள். ஆனால் ஏபிசிடியே போதும் என்று சொல்லிவிட்டார் இயக்குனர். அந்த ஈஸ்வரி கதாபாத்திரம் எனது மனைவி கதாபாத்திரமாகும். கதைப்படி எனது மனைவி ஈஸ்வரி இறந்துபோய்விடுவார். அந்த வலி எனக்குள் இருக்கும். ஆனால் அது படமாக்கப்படவில்லை.
நான் அந்த இயக்குனரிடமும் தயாரிப்பாளரிடமும் இந்த படம் ஓடாது என்று கூறினேன். நீங்கள் இந்த கதையின் இதயத்தையே தூக்கிவிட்டீர்கள். அப்படி இருக்கும்போது எப்படி இந்த படம் ஓடும் என்றேன்” என அப்பேட்டியில் ஷாம் பகிர்ந்துகொண்டார்.
2005 ஆம் ஆண்டு ஷாம், நந்தனா, சினேகா, அபர்ணா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஏபிசிடி”. இத்திரைப்படத்தை சரவண சுப்பையா இயக்கியிருந்தார். இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் படுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.