விஜய் டிவி To சினிமா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “லொள்ளு சபா” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் சந்தானம். “லொள்ளு சபா” நிகழ்ச்சியில் நடித்துகொண்டிருந்தபோதே இவருக்கென்று ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் இருந்தது. அதன் பின் “மன்மதன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார் சந்தானம்.

அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் கவுண்ட்டர் வசனங்களில் கலக்கிய சந்தானம், தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத காமெடியனாக உருவானார். ஒரு காலகட்டத்திற்கு பிறகு சந்தானம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். அதன் பின் தற்போது சந்தானம் கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறார்.
என் ஆருயிர் நண்பன்…
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்திரிக்கை பேட்டியில் சந்தானம் தனது ஆருயிர் நண்பனை குறித்த ஒரு நெகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துள்ளார். “சினிமா உலகத்திற்கு வந்து பிரபலமான பின்பு எல்லோருக்கும் பல நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால் அப்படி நான் புகழடைவதற்கு முன்பே எனது வாழ்க்கையில் முக்கிய அங்கமாக இருந்தவன்தான் எனது நண்பன் ஜிலானி.

அவன் ஒரு பணக்கார வீட்டு பையன். அவனோடு ஒப்பிட்டால் நானெல்லாம் ஒன்றுமே இல்லை. ஆனால் எப்போதுமே அவனுடைய காரில் என்னை ஏற்றிக்கொண்டு சுற்றிக்கொண்டே இருப்பான். அந்த சமயத்தில் லொள்ளு சபா நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்ததால் பல கல்லூரி விழாக்களிலே என்னை அழைப்பார்கள். அது போன்ற கல்லூரி விழாக்களில் பல நடிகர்கள் ஆடம்பர காரில் வந்து இறங்குவார்கள். அந்த விழாக்களுக்கு ஆட்டோ ரிக்சாவில் போவதற்கு கூட என்னிடம் காசு இருக்காது. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் கூட தன்னுடைய விலை உயர்ந்த காரில் என்னை ஏற்றி அந்த விழாக்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு அந்த டிரைவரிடம் விழா முடியும் வரை இருந்து இவனை அழைத்துக்கொண்டு வா என்று சொல்லி அனுப்புவான் ஜிலானி.
என்னுடைய முன்னேற்றத்தில் அவனுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அப்படிப்பட்ட ஆத்மார்த்தமான நண்பனை இப்போது இழந்துவிட்டேன் என்று நினைக்கும்போதுதான் என் மனதுக்கு அவ்வளவு வருத்தமாக இருக்கிறது” என கூறியிருக்கிறார். இந்த தகவலை தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.