சினிமா நடிகருக்கே இப்படி நடக்குதுனா?
ஒரு சாதாரண இந்திய குடிமகனுக்கு இருக்கும் சமூக அந்தஸ்திற்கும் சினிமா நடிகருக்கு இருக்கும் சமூக அந்தஸ்திற்கும் ஏற்றத்தாழ்வுகள் அதிகம். பொருளாதார நிலையிலும் தன் குடும்பத்தின் பாதுகாப்பிற்கு கியாரண்டி கொடுக்கும் வகையிலும் சினிமா நடிகர்கள் மேல்தட்டில் இருப்பார்கள். அப்படிப்பட்ட மேல்தட்டு வர்க்கத்திற்கே இப்படி ஒரு கொடுமை நடக்கிறது என்றால் மக்கள் நிச்சயம் பீதியடையவே செய்வார்கள். அப்படிப்பட்ட ஒரு அதிர்ச்சியான சம்பவம்தான் இப்போது நடந்திருக்கிறது.
நடிகருக்கு கத்திகுத்து
பாலிவுட்டின் மிக பிரபலமான முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் செயிஃப் அலி கான். இவர் பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூரை 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர் ஏற்கனவே 1991 ஆம் ஆண்டு அம்ரிதா சிங் என்ற நடிகையை திருமணம் செய்துகொண்டவர். அம்ரிதா சிங்கிற்கும் செயிஃப் அலி கானுக்கும் பிறந்தவர்தான் சாரா அலி கான். சாரா அலி கான் தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகை.

செயிஃப் அலி கான்-அம்ரிதா சிங் தம்பதியினர் 2004 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர். அதன் பிறகுதான் 2012 ஆம் ஆண்டு கரீனா கபூரை திருமணம் செய்துகொண்டார். செயிஃப் அலி கான்-கரீனா கபூர் தம்பதியினர் தற்போது மும்பையில் உள்ள பாண்ட்ரா பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு தைமர், ஜே என இரண்டு குழந்தைகள் உண்டு.
இந்த நிலையில் 16 ஆம் தேதி அதிகாலை 2.30 மணி அளவில் செயிஃப் அலி கான் விட்டிற்குள் கொள்ளைக்காரர்கள் புகுந்திருக்கின்றனர். தனது குடும்பத்தை அவர்களிடம் இருந்து காப்பாற்றும் பொருட்டு கொள்ளைக்கார கும்பலை அவர் தடுத்து நிறுத்த முயற்சி செய்திருக்கிறார். அப்போது கொள்ளை கும்பல் செயிஃப் அலி கானை 6 முறை கத்தியால் குத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து செயிஃப் அலி கான் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.