காமெடியில் தனி டிராக்
இளம் காமெடி நடிகர்களில் தனக்கென தனி டிராக்கில் பயணித்துக்கொண்டிருக்கும் ரெடின் கிங்க்ஸ்லி சமீப காலங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வளர்ந்துள்ளார். இவரது குரல் இவரது நகைச்சுவைகளுக்கு தனி பலம் சேர்ப்பவை. போகிற போக்கில் இவர் உதிர்க்கிற நகைச்சுவை வசனங்கள் ரசிகர்களை பெருமளவில் ஈர்த்துள்ளது.

அவரது சினிமா கெரியரை பொறுத்தவரை முதலில் டான்சராகதான் தனது பயணத்தை தொடங்கினார். அதன் பின் “கோலமாவு கோகிலா” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமாக அறியப்பட்டாலும் “டாக்டர்” திரைப்படம் இவருக்கு திருப்புமுனையான திரைப்படமாக அமைந்தது.
நெல்சனை சந்தித்த தருணம்
இயக்குனர் நெல்சனும் ரெடின் கிங்க்ஸ்லியும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக பயணித்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ரெடின் கிங்க்ஸ்லி, தான் நெல்சனை முதன்முதலில் சந்தித்தது குறித்த ஒரு சம்பவத்தை நகைச்சுவை தொனியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

“நான் நடனம் சொல்லிக்கொடுக்கும் ஒரு இன்ஸ்டிட்யூட்டை நடத்தி வந்தேன். அப்போது பல கல்லூரி மாணவர்கள் நடனப்போட்டிக்காக என்னிடம் பயிற்சிக்கு வருவார்கள். அந்த சமயத்தில்தான் ஒரு கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்கள் என்னிடம் பயிற்சிக்கு வந்தார்கள். அதில்தான் நெல்சன் இருந்தார். அப்போதுதான் அவரை முதல்முதலாக பார்த்தேன்.
அவர்கள் சேர்த்து வைத்திருந்த Pocket Money எல்லாம் சேர்த்து ரூ.4000 எனக்கு Fees ஆக கொடுத்தார்கள். அவர்களுக்கு நடனம் சொல்லிக்கொடுக்கும்போதுதான் தெரிந்தது அவர்களுக்கு சுத்தமாக நடனமே வரவில்லை என்று. ஆனால் இந்த உண்மையை சொல்லி அவர்களை திருப்பி அனுப்பினால் கொடுத்த பணத்தை திரும்ப கேட்பார்கள். நான் ஏற்கனவே அந்த பணத்தை செலவழித்துவிட்டேன்.

ஆதலால் எப்படியோ அவர்களுக்கு நடனம் சொல்லிக்கொடுத்தேன். அவர்கள் நடனப்போட்டியில் முதல் பரிசு வாங்கிவிட்டார்கள். அதன் பிறகுதான் நெல்சன் “இவன் பயங்கரமான ஆளா இருக்கானே” என்று என்னை நினைவில் வைத்துக்கொண்டார்” என்று அப்பேட்டியில் ரெடின் கிங்க்ஸ்லி அந்த சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.