மோகன்லாலின் எம்புரான்
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகலால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் வருகிற 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் மோகன்லாலுடன் டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், பிரித்விராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு பிரித்விராஜ் இயக்கி மோகன்லால் நடித்து மாஸ் ஹிட் அடித்த “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம்தான் இத்திரைப்படம். இத்திரைப்படத்தின் வெளியீடு நெருங்கி வருவதால் இத்திரைப்படத்தின் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் பிரித்விராஜ்.

ரஜினிகாந்துதான் இன்ஸ்பிரேஷன்
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரித்விராஜ், “லூசிஃபர்” திரைப்படத்தில் இடம்பெற்ற மோகன்லால் அறிமுக காட்சியை ரஜினிகாந்த் குறித்து தான் படித்த ஒரு சம்பவத்தை இன்ஸ்பைர் செய்து தான் படமாக்கியதாக தெரிவித்துள்ளார்.
“லூசிஃபர்” திரைப்படத்தில் மோகன்லாலுடைய காரை ஒரு காவலர் மடக்கி உள்ளே அனுமதிக்க முடியாது என்ன கூறுவார். உடனே மோகன்லால் காரை விட்டு வெளியேறி நடந்து செல்வார். அப்போது அவரை பார்த்து கூட்டம் கூடிவிடும். வேறு வழி இல்லாமல் வழிவிட்டுவிடுவார்கள்.

அதாவது ரஜினிகாந்த் வீடும் ஜெயலலிதாவின் வீடும் சென்னை போயஸ் கார்டன் பகுதியில் அருகருகே உள்ளன. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஒரு நாள் ரஜினிகாந்த் படப்பிடிப்பை முடித்துவிட்டு போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டிற்கு காரில் திரும்பியுள்ளார். எப்போதும் முதல்வர் வீட்டிற்கு முன்னால் பல போலீஸ் வாகனங்கள் பந்தோபஸ்திற்காக நிற்பது வழக்கம்தான்.
அந்த வகையில் அந்த நாளும் ஜெயலலிதாவின் வீட்டிற்கு முன் போலீஸ் கார்கள் பல நின்றுகொண்டிருந்தன. ஜெயலலிதாவின் வீட்டின் வழியாகத்தான் ரஜினிகாந்த் தனது வீட்டிற்கு செல்லமுடியும். ஜெயலலிதாவின் வீட்டிற்கு முன் நிறைய போலீஸ் கார்கள் நின்றதனால் ரஜினிகாந்தின் கார் செல்வதற்கு வழி இல்லாமல் போயிருக்கிறது.

அதற்கு முன்பும் இது போல பல சம்பவங்கள் நடந்து ஜெயலலிதாவிடம் ரஜினிகாந்த் இது குறித்து புகாரெல்லாம் அளித்திருக்கிறார். ஆனாலும் இது வழக்கமாக நடந்தபடி இருந்துள்ளது. இந்த நிலையில்தான் அன்று ரஜினிகாந்த் கடுப்பாகி காரை விட்டு வெளியேறி நடந்தே செல்லலாம் என யோசித்தார். அவர் காரை விட்டு வெளியேறியவுடன் சாலையில் இருந்த பலரும் ரஜினிகாந்த்தை பார்த்து ஆர்ப்பரித்துக்கொண்டு அவர் பின்னால் சென்றார்கள். அந்த இடமே கூட்டமாக காட்சியளித்தது. இதனால் காவலர்கள் மிரண்டுப்போனார்கள். அன்றைய நாளில் இருந்து ரஜினிகாந்த் வீட்டிற்கு செல்வதற்கு ஜெயலலிதா தனி வழியையே அமைத்துக்கொடுத்தாராம்.
இந்த சம்பவத்தை வைத்துதான் “லூசிஃபர்” திரைப்படத்தில் மோகன்லால் அறிமுக காட்சியை படமாக்கியுள்ளார் பிரித்விராஜ்.