அதிர்ச்சியை அளித்த தீர்ப்பு
சிவாஜியின் மூத்த மகனான ராம்குமாருக்கு துஷ்யந்த் என்றொரு மகன் இருக்கிறார். இவர் “சக்ஸஸ்”, “மச்சி”, “தீர்க்கதரிசி” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். “மீன் குழம்பும் மண் பானையும்” என்ற திரைப்படத்தை தயாரித்தும் உள்ளார். அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு இவர் தயாரித்த திரைப்படம்தான் “ஜகஜால கில்லாடி”.

இத்திரைப்படத்தை தயாரிக்க துஷ்யந்த் தனபாக்கியம் என்டெர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.3.74 கோடி கடனாக பெற்றுள்ளார். இந்த கடனை அவர் திருப்பி செலுத்ததனால் தனபாக்கியம் என்டெர்பிரைசஸ் நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வாங்கிய கடனை வட்டியோடு சேர்த்து ரூ.9.39 கோடியாக திருப்பி தர வேண்டும் எனவும் “ஜகஜால கில்லாடி” திரைப்படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் என்டெர்பிரைசஸ் நிறுவனத்திடம் வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
ஆனால் அத்திரைப்படத்தின் உரிமைகளை தனபாக்கியம் என்டெர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்க துஷ்யந்த் தரப்பு மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து தனபாக்கியம் என்டெர்பிரைசஸ் நிறுவனம் சிவாஜி கணேசனின் வீட்டை பொது ஏலத்திற்கு விடக்கோரி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் துஷ்யந்த் நீதிமன்றத்தில் பதிலளிக்க கால அவகாசமும் கொடுக்கப்பட்டது. ஆனால் துஷ்யந்த் தரப்பு கால அவகாசம் முடிந்த பிறகும் கூட பதிலளிக்கவில்லை என்பதால் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்த உத்தரவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அது பிரபு வீடு
இதனை தொடர்ந்து சிவாஜியின் மூத்த மகனான ராம்குமார், “சிவாஜியின் அன்னை இல்லம் ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஜப்தி உத்தரவிற்குள்ளான இல்லம் எனது சகோதரர் பிரபுவுக்கு உரியது” என நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். இதனை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் ஒரு விழாவில் பேசியபோது, “சிவாஜி வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என்று வெளியான தீர்ப்பால் நான் அழுதுவிட்டேன்” என கூறினார். ஏற்கனவே இது குறித்து அவர் ஒரு பேட்டியில் தனது கவலையை பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதி உண்மைதான் இருக்கு…
மேலும் அவ்விழாவில் பேசிய கே.ராஜன், தான் கவலையோடு பேசியதை அடுத்து தன்னை பிரபு தொடர்புகொண்டதாக கூறினார். கே.ராஜனை தொடர்புகொண்ட பிரபு, “அண்ணே, உங்க பேச்சை கேட்டு நான் அழுதுட்டேன். ஆனால் இதுல பாதிதான் உண்மை. அந்த வீட்டை அப்பா என் பெயரில் எழுதியிருக்கிறார். இதில் ஏதோ குளறுபடி நடந்திருக்கிறது. ஆதலால் இந்த வீடு ஏலம் போகாதுண்ணே” என கூறினாராம்.