
இசைஞானி இளையராஜா
தமிழ் சினிமா இசை உலகில் இசைஞானியாக 45 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வருபவர் இசையமைப்பாளர் இளையராஜா. “அன்னக்கிளி” தொடங்கி “விடுதலை 2” வரை மூன்று தலைமுறை இசை ரசிகர்களின் உள்ளங்களையும் ஆண்டு வருகிறார் அவர். பண்ணைபுரத்தில் தொடங்கிய இவரது பயணம் பாராளுமன்றத்தையும் ஒரு கை பார்த்துவிட்டது.
முதல் பாடல் ரெக்கார்டிங்க்
இசைஞானி இளையராஜா இசையமைத்த முதல் திரைப்படமான “அன்னக்கிளி” 1976 ஆம் ஆண்டு வெளியானது. தனது முதல் திரைப்படத்திலேயே பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது அவரது பாடல்கள். எனினும் இத்திரைப்படத்தின் முதல் பாடல் பதிவின்போது ஏற்பட்ட அனுபவத்தை குறித்து கங்கை அமரன் தனது “பண்ணைபுரம் எக்ஸ்பிரஸ்” என்ற நூலில் பகிர்ந்துள்ளார்.

சகுணமே சரியில்லையே….
அதாவது “அன்னக்கிளி” திரைப்படத்தின் முதல் பாடலை பதிவதற்கு முன்பு ரெக்கார்டிங்க் ஸ்டூடியோவில் பல முறை ஒத்திகை பார்க்கப்பட்டதாம். அந்த ஸ்டூடியோவில் “அன்னக்கிளி” திரைப்படத்தின் தயாரிப்பளர், இயக்குனர் உட்பட பலரும் அமர்ந்திருக்கிறார்கள். இந்த நிலையில் தனது முதல் திரைப்படத்தின் முதல் பாடலை பதிவு செய்ய ஆயத்தமானார் இளையராஜா.
அதன்படி அனைத்து ஒலிக்கருவிகளையும் உதவியாளர்கள் தயாராக வைத்திருக்க, 1,2,3,4, Start என கூற, சடாரென மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டதாம். அந்த நேரத்தில் அந்த ஸ்டூடியோவில் இருந்த ஒருவர் “நல்ல சகுணம்டா” என கூற, அதனை கேட்ட இளையராஜாவின் மனம் கலங்கிப்போனது. எனினும் உடனே மின்சாரம் வர, அடுத்த வினாடியே பாடல் பதிவினை தொடங்கினார் இளையராஜா. அதன் பின் நடந்ததெல்லாம் வரலாறு….