தென்னிந்தியாவின் பிரபலமான பாடகி
1991 ஆம் ஆண்டு இளையராஜா இசையில் “என் ராசாவின் மனசிலே” படத்தில் இடம்பெற்றிருந்த “போடா போடா புண்ணாக்கு” என்ற பாடலை பாடியதன் மூலம் குழந்தை பின்னணி பாடகியாக அறிமுகமானவர் கல்பனா. இவர் அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான பின்னணி பாடகியாக தற்போது வலம் வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் 6, 7, 8 ஆகிய சீசன்களிலும் சூப்பர் சிங்கர் 8 ஆவது சீசனிலும் நடுவராக வந்தார். அது மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மொழி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் நடுவராக இடம்பெற்றார். 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் தெலுங்கு முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று 28 ஆவது நாள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவர் சிறுமியாக இருந்தபோது கமல்ஹாசனின் “புன்னகை மன்னன்” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.
தற்கொலை முயற்சி
இந்த நிலையில் நேற்று கல்பனா, ஹைதராபாத்தில் அவர் வசித்து வரும் இல்லத்தில் தற்கொலை முயற்சி செய்துகொண்டதாக பகீர் செய்தி வெளியானது. கல்பனாவின் கணவர் சென்னைக்கு சென்றிருந்த நிலையில் இரண்டு நாட்களாக அவரது வீட்டுக் கதவு திறக்கபடாமல் இருந்திருக்கிறது. அங்குள்ள வீட்டு காவலர் கதவை பல முறைகள் தட்டியும் திறக்கவில்லை. அவரது மொபைல் நம்பரை தொடர்புகொண்டபோதும் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அதனை தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அப்போதுதான் அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது. அதன் பின் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இப்போது எப்படி இருக்கிறார்?
நேற்று மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கல்பனா, தற்போது ஆபத்தான நிலையில் இருந்து வெளிவந்துவிட்டதாக கூறப்படுகிறது. மிக விரைவிலேயே உடல் நலம் பெற்றுவிடுவார் என மருத்துவர்கள் கூறிவருகிறார்களாம். தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த பல பாடகர்கள் அவரை மருத்துவமனையில் சென்று சந்தித்து நலம் விசாரித்து வருகிறார்கள்.