கவுண்ட்டருக்கு பெயர் போன கவுண்டமணி
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக காலத்தை தாண்டியும் தனது நகைச்சுவையால் ரசிகர்களை கட்டி ஆண்டு வருகிறவர் கவுண்டமணி. பல ஆண்டுகளாக இவர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டாலும் இவரது காமெடி காட்சிகள் இப்போதும் அதிகளவில் ரசிக்கப்படுவது உண்டு. குறிப்பாக மீம் டெம்ப்ளேட்டுகளாக கவுண்டமணியின் காமெடி காட்சிகள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.

ஏழ்மையான நிலை
கவுண்டமணி மிகப் பெரிய காமெடி ஜாம்பவனாக ஜொலித்திருந்தாலும் அவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ஏழ்மையில் இருந்தார். அவர் தொடக்கத்தில் பல மேடை நாடகங்களில் நடித்து வந்தார். அதனை தொடர்ந்துதான் சினிமாக்களில் நடிக்கத் தொடங்கினார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய பார்த்திபன் கவுண்டமணி குறித்து பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பரிதாபகரமான நிலை…
“கவுண்டமணியை நான் ரொம்ப ஆரம்பக்கட்டத்தில் பார்த்திருக்கிறேன். 16 வயதினிலே படத்தில் அவர் நடிப்பதற்கு முன்பே பார்த்திருக்கிறேன். நான் பள்ளிக்கு போகும்போதும் வரும்போதும் எல்டாம்ஸ் ஹோட்டல் வெளியே மிகவும் பரிதாபகரமான நிலையில் நின்றுகொண்டிருப்பார். அதன் பின் நானும் அதே இடத்தில் நின்றிருக்கிறேன். டப்பிங்கிற்கு யாராவது அழைத்துச் செல்ல மாட்டார்களா? என்று நின்றுகொண்டிருப்பேன். அதே போல்தான் கவுண்டமணி சார்-ம் அங்கு நின்றுகொண்டிருப்பார். அவ்வளவு சிரமத்தில் இருந்து வந்தவர்தான் அவர்.

அதன் பின் அவரை டாடா பிர்லா படத்தில்தான் பார்த்தேன். அந்த ஊரில் செவன் ஸ்டார் ஹோட்டல் இருந்தால் செவன் ஸ்டார் ஹோட்டலில்தான் அவர் தங்குவார். ரொம்பவும் ஸ்டைலிஷான ஒரு மனிதர். சிறந்தது எது இருக்கிறதோ அதைத்தான் அவர் சாப்பிடுவார். அவர் மனதிற்குள்ளேயே ஒரு ராஜா என்ற உணர்வு அவருக்கு. அவர் தனது வாழ்க்கையை மிகவும் அழகாக வாழ்ந்தார், வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது” என அப்பேட்டியில் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.