புதுமை விரும்பி
தமிழ் சினிமாவில் மிக வித்தியாசாமன கதை சொல்லியாகவும் புதுமை விரும்பியாகவும் திகழ்ந்து வருபவர் பார்த்திபன். இவர் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் “புதிய பாதை”. இதில் பார்த்திபனே கதாநாயகனாக நடித்திருந்த நிலையில் சீதா கதாநாயகியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

கமலுடன் போட்டி
“புதிய பாதை” திரைப்படம் வெளியான அதே நாளில்தான் கமல்ஹாசனின் “அபூர்வ சகோதரர்கள்” திரைப்படமும் வெளியானது. “புதிய பாதை” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படம் தயாராக இருந்த நிலையில் எந்த விநியோகஸ்தரும் இத்திரைப்படத்தை வாங்க முன்வரவில்லையாம். ஏனென்றால் “கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் வெளியாகிறது. நீங்கள் புதுமுக கதாநாயகன். வேறு நாளில் இத்திரைப்படத்தை வெளியிடலாமே” என்று கூறினார்களாம்.

ஆனால் பார்த்திபனோ, தயாரிப்பாளரிடம் “கமல் படம் வெளியாகும் நாளில்தான் நமது படமும் வெளியாகவேண்டும். ஏனென்றால் கமல் படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்களாவது இந்த படத்தை வந்து பார்ப்பார்கள்” என யோசனை கூறினாராம். அதுமட்டுமல்லாது, “புதிய பாதை” திரைப்படத்திற்கு ஒரு புதுமையான விளம்பர வரிகளையும் பார்த்திபன் வைத்திருந்தாராம்.
அதாவது, “யானைக்கு சோறூட்டுகையில் அதில் இருந்து விழும் பருக்கை ஆயிரம் எறும்புக்கு தீனி. ஆதலால் அனைவரும் கமல் படத்திற்கு போங்கள். அங்கே டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் எனது படத்தை வந்து பாருங்கள். உங்களை திருப்திப்படுத்துவேன் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று விளம்பரம் செய்யலாம் என யோசனை கூறினாராம். இது தயாரிப்பாளரையும் விநியோகஸ்தரையும் கவர அதன் பின் “புதிய பாதை” திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றது.