பிப்ரவரியில் விடாமுயற்சி
அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள “விடாமுயற்சி” திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில் பிப்ரவரி 6 ஆம் தேதி “விடாமுயற்சி” திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில படத்தின் தழுவல்
“விடாமுயற்சி” திரைப்படம் 1997 ஆம் ஆண்டு வெளியான “Breakdown” என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் “Breakdown” திரைப்படத்தை தயாரித்த Paramount Pictures நிறுவனத்துடன் “விடாமுயற்சி” படக்குழு சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாம்.

முதலில் Paramount நிறுவனம் ரூ.100 கோடி கேட்டிருக்கிறது. அதன் பின் நடந்த சமரச பேச்சு வார்த்தையில் லைகா நிறுவனம் Paramount நிறுவனத்திற்கு முதலில் ரூ.10 கோடி கொடுக்க வேண்டும் எனவும், அதனை தொடர்ந்து படம் வெளியான பிறகு கிடைக்கும் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் பங்கு தரவேண்டும் எனவும் நிபந்தனை போடப்பட்டுள்ளதாம். இதற்கு லைகா நிறுவனமும் ஒப்புக்கொள்ள அதன் பிறகுதான் இத்திரைப்படத்தை பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியிட முடிவெடுக்கப்பட்டதாம்.