அரசியல்வாதியும் நடிகரும்
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்தவர் பழ.கருப்பையா. அதுமட்டுமல்லாது இவர் அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏவும் ஆவார். இவர் “அங்காடித் தெரு”, “சர்க்கார்”, “ஆக்சன்” போன்ற பல தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

“இன்று நீ நாளை நான்”, “அந்த ஒரு நிமிடம்”, “தீர்த்த கரையினிலே”, “பொறுத்தது போதும்” ஆகிய திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார். அது மட்டுமல்லாது “வா வா வசந்தமே” என்ற திரைப்படத்தையும் இவர் இயக்கியுள்ளார். இவ்வாறு பல பரிமாணங்களில் திகழ்ந்து வந்த பழ.கருப்பையா தயாரித்த ஒரு திரைப்படத்தை குறித்த ஒரு அரிய தகவலைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
கிடைச்ச லாபம் சிகரெட்தான்…
1983 ஆம் ஆண்டு பழ.கருப்பையா தயாரித்த திரைப்படம் “இன்று நீ நாளை நான்”. இத்திரைப்படத்தை மேஜர் சுந்தர்ராஜன் இயக்கியிருந்தார். இதில் சிவகுமார் கதாநாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தை பழ.கருப்பையா, மேஜர் சுந்தர்ராஜன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர்.

இத்திரைப்படத்திற்காக ஒரு ஹோட்டல் அறையில் மேஜர் சுந்தர்ராஜனும் பழ.கருப்பையாவும் டிஸ்கஷனில் இருந்தபோது ஒரு வேலைக்கார சிறுவன் தினமும் அந்த அறைக்கு வந்து இரண்டு பாக்கெட் 555 பிராண்ட் சிகரெட் வைத்துவிட்டுச் செல்வானாம். ஆனால் பழ.கருப்பையா எப்போதும் விலை குறைந்த Wills பிராண்ட் சிகரெட்டைத்தான் பிடிப்பாராம்.
அந்த சமயத்தில் ஒரு நாள் பழ.கருப்பையா மேஜர் சுந்தர்ராஜனை பார்த்து, “தினமும் இரண்டு பாக்கெட் 555 சிகரெட் பாக்கெட்டை என் அறையில் வைத்துவிட்டுப்போகிறானே, அதற்கான பணம் நம்முடைய பணம்தானே?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு மேஜர் சுந்தர்ராஜன், “நீங்க இப்போ இந்த படத்தோட தயாரிப்பாளர் ஆகிட்டீங்க. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும்போது படத்தில் நடிக்கின்ற நடிகர்கள் வெளியூர் படப்பிடிப்பிற்கு வரும்போது நிச்சயம் விமானத்தில்தான் பயணம் செய்வார்கள்.

அங்கே இருக்கின்ற நல்ல நல்ல நட்சத்திர ஹோட்டல்களில்தான் தங்குவார்கள். அங்கே அவர்கள் தங்கியிருக்கும்போது அந்த செலவுக்கெல்லாம் நீங்கள்தான் பணம் கொடுக்க வேண்டும். இவ்வளவு செலவழிக்கும்போது இந்த சிகரெட் பாக்கெட்டினால் எவ்வளவு கூடுதலாக செலவு வந்துவிடப்போகிறது. ஆதலால் நல்ல உயர்தர சிகரெட்டையே தொடர்ந்து பிடியுங்கள்” என்று பதிலளித்தாராம். இது குறித்து பின்னாளில் பழ.கருப்பையா ஒரு பேட்டியில் பேசியபோது, “இன்று நீ நாளை நான் படத்தை பொறுத்தவரை அந்த படத்தை தயாரித்ததில் எனக்கு கிடைத்த ஒரே லாபம் என்னவென்றால், இந்த 555 சிகரெட்டிற்கு நான் பழகியது மட்டுந்தான்” என்று அப்பேட்டியில் கூறினாராம்.