வெளியீட்டை நிர்ணயிக்கும் ஓடிடி…
சமீப காலமாக ஓடிடி தளங்கள் சினிமா ரசிகர்களின் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. வெப் சீரீஸ்களில் இருந்து புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் வரை ஓடிடி தளங்களில் கண்டுகளிக்கின்றனர். எனினும் சில ஆண்டுகளாகவே ஒரு திரைப்படத்தின் வெளியீட்டை ஓடிடி நிறுவனங்கள் நிர்ணயிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்றால் அத்திரைப்படம் ஓடிடிக்கு விற்கப்பட்டப் பிறகுதான் வெளியிடும் தேதியை அறிவிக்க முடியும் என்ற நிலைக்கு சினிமாத்துறை தள்ளப்பட்டுள்ளதாக பேச்சுக்கள் எழுகின்றன. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்ட கேள்வி ஒன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஓடிடி நிறுவனங்கள் போடும் கண்டிஷன்…
“ஒரு திரைப்படம் திரையரங்கில் வெளியாகி 3 மாதங்கள் கழித்துதான் ஓடிடியில் வெளியாக வேண்டும், 6 மாதங்கள் கழித்துதான் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப வேண்டும். இவ்வாறு செய்தால்தான் வசூல் அதிகரிக்கும், தயாரிப்பாளர்களும் நன்றாக இருப்பார்கள். இதை பற்றி ஏன் யாரும் யோசிப்பதில்லை?” என அந்த ரசிகர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு சித்ரா லட்சுமணன், “நீங்கள் கூறுகின்ற முறையில் திரைப்படங்களை வெளியிட்டால் திரையரங்குகளில் வசூல் கூடுதலாக வர வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஓடிடி நிறுவனங்கள் அத்திரைப்படங்களை வாங்குவார்களா என்பது சந்தேகம்தான். படம் வெளியான நான்கு வாரங்களில் அத்திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளிவர வேண்டும் என்பதுதான் ஓடிடி நிறுவனங்கள் போடும் கண்டிஷன்” என அவர் பதிலளித்திருந்தார்.