நெட்பிலில்ஸ் ஒரிஜினல்ஸ்…
ஓடிடி யுகம் தொடங்கியதில் இருந்து சினிமாத் துறையின் வணிகமே வேறு ஒரு வடிவம் பெற்றது. தொடக்கத்தில் ஓடிடி நிறுவனத்தால் வரும் லாபத்தை நம்பி பல தயாரிப்பாளர்கள் இருந்தனர். இப்போதும் அதே நிலைதான் என்றாலும் ஓடிடி நிறுவனம் திரைப்படங்களை விலைக்கு வாங்குவதில் பல நிபந்தனைகளை இட்டுள்ளதால் சில காலமாக ஓடிடி விநியோகம் சிக்கலில் இருக்கிறது.

இந்த நிலையில் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளம் 2025 ஆம் ஆண்டில் பல திரைப்படங்களை விலைக்கு வாங்கியுள்ளது. அதுமட்டுமல்லாது சொந்தமாக பல திரைப்படங்களையும் வெப் சீரீஸ்களையும் தயாரிக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது. இதில் ஹிந்தியில் 16க்கும் மேற்பட்ட திரைப்படங்களையும் வெப் சீரீஸ்களையும் நெட்பிலிக்ஸ் சொந்தமாக தயாரிக்கவுள்ளது. ஆனால் தமிழில் ஒரே ஒரு வெப் சீரீஸை மட்டுமே நெட்பிலிக்ஸ் இந்த வருடம் தயாரிக்கவுள்ளது. இந்த வேறுபாடு ஏன் என்று ஒரு ரசிகர், பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணனிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
என்ன காரணம்?
இந்த கேள்விக்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன், “ஒரு ஓடிடி நிறுவனம் வெப் சீரீஸ் ஒன்றை தயாரிக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு முதலில் கதை பிடித்திருக்க வேண்டும். அதற்கு பின்னாலே அந்த கதையில் யார் யார் நடிக்கப்போகிறார் என்பதெல்லாம் மிகவும் முக்கியமான விஷயம்.

இது போன்ற விஷயங்கள் எல்லாம் சரியாக அமைந்திருந்தால் நிச்சயமாக நெட்பிலிக்ஸ் பல வெப் சீரீஸ்களை தயாரித்திருப்பார்கள். இது எல்லாமே சரியாக அமைந்திருந்தால் தமிழிலும் நிச்சயமாக பல வெப் சீரீஸ்களை தயாரித்திருப்பார்கள். அவர்கள் கேட்ட கதை அவர்களுக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம் அல்லது கதை கூறிய இயக்குனர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகர்கள் அவர்களுக்கு விருப்பமானவர்களாக இல்லாமல் இருக்கலாம். இதன் காரணமாகத்தான் நெட்பிலிக்ஸ் நிறுவனம் தமிழில் ஒரே ஒரு வெப் சீரீஸை மட்டும் தயாரிக்க முடிவெடுத்துள்ளதாக நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.